30/01/2020

இருள்


எங்கே இருளில்லை?!

கொதிக்கும் சூரியனின்
கொப்பளிக்கும் மையத்தில்
நேரெதிர் மோதுகின்ற
நெருப்புக் கோடாய்;
ரௌத்திரம் காட்டுகின்ற
ராத்திரிக் காடாய்;
ராகுவாய்; கேதுவாய்;
இருப்பது இருள்தானே?!

ஒளிவாங்கி உமிழ்கின்ற
சோலார் நுட்பத்தை
ஊருக்கேப் பறைசாற்றும்
ஒய்யாரப் பிரதிநிதியாய்;
எல்லாக் கவிஞருக்கும்
எப்போதும் உவமதியாய்;
நிலவின் பின்னாலே
இருப்பதும் இருள்தானே?

கருவறை வரும்போதும்
கல்லறை புகும்போதும்;
இருளறை அதுவென்றா
விளக்கறை கேட்கின்றோம்!
விளக்கம் இருக்குமெனில்
விளக்கிடுவீர் பெரியோரே..

சுத்தவெளி சூனியமாய்
சுற்றியுள்ள அத்தனையும்;
இருட்டைத் தன்னகத்தே
இருப்பாய் வைக்கையிலே;
இருட்டென்றால் பயமெதற்கு
இயம்பிடுவீர் பெரியோரே..

இருட்டிலும் கண் தெரியும்
குருட்டில்லா ஆந்தையைப்போல்
குருட்டிலும் கண் தெரியும்
இருட்டில்லா விந்தைபெற
இருளகம் போய்விட்டால்
இருளும் ஒளியன்றோ?!!

✍️செ. இராசா

No comments: