30/01/2020

புத்தக விமர்சனம்

(புத்தக விமர்சனம் Dr. Elanchezian Sav ஐயா அவர்களுக்கு)

ஐயா வணக்கம்,

நான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் படித்துவிட்டு அதையேதான் தாங்கள் ஆங்கிலத்திலும் வெளியிட்டுளீர்கள் என்று இந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை. இன்றைக்குதான் மீண்டும் படிக்கலாம் என்று படித்தேன்.
நான் நினைத்ததுபோல் இப்புத்தகம் கடினமாக இல்லை. காரணம் இந்தப் புத்தகத்தில் உள்ள ஆங்கிலம் எனக்கேப் புரிந்தது மட்டுமல்லாது மிகவும் அருமையாகவும் இருந்தது.

அந்த யானை மற்றும் சிலந்தி கதை இப்போது தான் நானும் படித்து அறிந்து கொண்டேன். கும்பகோணம் அருகில் உள்ளச் சின்னக் கோவிலில் தாங்கள் நடத்திய ஆய்வு மிகவும் அருமையான ஒன்று. எட்டுக்கால் சிலந்தி பற்றி சொல்லும்போது முக்குணங்களை ஆராய்ந்து அதைத் தமிழிலும் சொன்ன விதம் அருமை.

அடுத்ததுத் தாங்கள் கொடுத்தக் கட்டுரையின் தலைப்பு (negative spaces) மிகவும் வித்தியாசமாக இருந்தது. இடம் விட்டுக் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய ஆய்வு அது. பொதுவாக குறுகிய தெருவில் கட்டப்படும் எத்தனையோ கட்டிடங்கள் ஏன் அழகில்லாமல் போகின்றன என்பதை நான் கட்டிடவியல் பொறியாளர் என்ற முறையில் அறிவேன். ஆக இடம் விட்டுக் கட்டப்படும் கோவில் பற்றி சொன்ன அந்த கோணம் அழகோ அழகு.

அடுத்துத் தாங்கள் சொன்ன கள்ளழகர் கோவில் பற்றிய கட்டுரை உண்மையில் என் கண்களைத் திறந்தது. ஒரு கட்டிடத்தை கட்டிடக்கலைச் சிற்பத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று காட்டியது. அந்தமண்டபத்துச் சிற்பங்களை ஆராய்ந்து ஒவ்வொன்றாய் விளக்கியபோது அந்த படைப்பாளி இன்னும் வாழ்வதாகவே உணர்கின்றேன்.

பொதுவாக அனைத்துப் புத்தகங்களிலும் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப் படும். ஆனால் தங்களின் ஆங்கிலப் புத்தகத்தில் தமிழ்ப் பெயர்கள் பயன்படுத்தியதை நான் மிகவும் பாராட்ட விரும்புகிறேன். ஒரு தமிழ் ஆர்வலர், கவிஞனாகவும் வரலாற்று ஆய்வாளராகவும் இருந்தால் எப்படி ஒரு புத்தகம் வெளி வரும் என்பதை நன்றாக உணர்கின்றேன்.

தமிழ் பெரிது பெரிது என்று நாமாகச் சொல்லுவது இனியும் பயன் தராது. இப்படி அனைவருக்கும் எடுத்துச் செல்வதே சரியாக இருக்கும். இப்புத்தகத்தில் குறை இல்லையென்று சொல்ல மாட்டேன், காரணம் கட்டிடவியல் அல்லாதவர்களுக்கு இப்புத்தகம் சற்றே சலிப்புத்தட்டும் வாய்ப்பும் உள்ளது. காரணம், நிறைய தொழில் நுட்ப விஷயங்களும் உள்ளது.மேலும் புகைப்படங்கள் தனியாகத் தரப்பட்டுள்ளது சற்றே அசௌகரியமாத் தோன்றலாம். ஆயினும் படங்களை மட்டும்கூடத் தனியாக ரசிக்கலாம்.

மேலும், தங்களைப் பற்றிய என்னுரை மிகவும் வியப்பாக இருந்தது. குறிப்பாக தாங்கள் சென்னையின் மழை வெள்ளத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை சூனியத்தில் இருந்து தொடங்கியது பற்றிய விபரம் உண்மையில் பிரமிப்பாக இருந்தது.

பொதுவாக நான் ஆங்கிலப் புத்தகம் அதிகமாகப் படிப்பவனல்ல. ராபின் சர்மா புத்தகம் மட்டும் விரும்பிப் படிப்பேன். ஆனால், தங்களின் புத்தகத்தை விடாமல் ஒரே மூச்சில் படித்தேன். மிகவும் எளிய பாமர நடை. காரணம் எனக்கேப் புரிகிறது. தங்களின் புத்தகம் உண்மையில் தமிழை தமிழனை உலகறியச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற படைப்புகளை மேலும் மேலும் தர அன்போடு வேண்டுகிறேன்.

வாழ்த்துகள்...நன்றி நன்றி

No comments: