12/01/2020

எத்தனை விருப்பீடு (likes)



எத்தனை விருப்பீடு (likes)
எத்தனை கருத்தீடு (comments)
இப்படி..
எண்ணிக்கையின் கணக்கையே
எப்போதும் எண்ணாதீர்

இங்கே..
மிகுந்தால் உயர்வென்றும்
குறைந்தால் குறையென்றும்
தப்புக் கணக்கிட்டுத்
தவறிழைத்துவிடாதீர்...

பாரதப்போரில்
பார்த்தன் வேண்டியது
ஒரு பரந்தாமனைத்தான்;
துரியாதனன் வேண்டியதோ
இரண்டு அக்ரோனிப் படைகளை..
ஆனால் முடிவு என்னாயிற்று?!
நூறை ஐந்து வென்றதே?!!

பல-சரக்குக் கடைகளைவிட
புத்தகக் கடைகளில்
கூட்டம் குறைவுதான்
அதற்காகப் புத்தகங்களைக்
குறை சொல்ல முடியுமா?!

அறத்துப்பாலைவிட
இன்பத்துப்பால் இனிப்பானதுதான்
அதற்காக
காம பாசுரத்தை
கந்த சஷ்டியாக்க முடியுமா?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சூரியன்தான்
ஒரு வள்ளுவர்தான்
ஒரு கம்பர்தான்
ஒரு புகழேந்திதான்
ஒரு பாரதிதான்
ஒரு கண்ணதாசர்தான்
ஒரு நீங்கள்தான்
ஒரு நான் தான்...

இங்கே யாரும் யாராக வேண்டாம்
இங்கே யாரும் வேறாக வேண்டாம்
வருவது வரட்டும்..
வரும்போது வரட்டும்..

விதை வெடிக்கும் வரை
வீரியம் பெறட்டும்!
விருப்பம் ஜெயிக்கும் வரை
வினை விளையாடட்டும்!

அதுவரை...
விதைத்துக் கொண்டே இருப்போம்
#எதையும்_எண்ணாமல்...

✍️செ. இராசா

No comments: