11/10/2019

ஒற்றைக் காலிலே ஆடுகின்றான்




ஒற்றைக் காலிலே ஆடுகின்றான்- இவன்
ஒய்யார நடனம் ஆடுகின்றான்!
ஒப்பனை இன்றியே ஆடுகின்றான்-இவன்
அப்பனைப் போலவே ஆடுகின்றான்!

ஊருக்கு வேண்டியும் ஆடவில்லை-இவன்
யாருக்கு வேண்டியும் ஆடவில்லை!
தன்னை மறந்தே ஆடுகின்றான்- இவன்
தகப்பனைப் போலவே ஆடுகின்றான்!

வெற்றியின் களிப்பிலும் ஆடவில்லை- அதைப்
பற்றிடும் நினைப்பிலும் ஆடவில்லை!
சிந்தையின் சிரிப்பில் ஆடுகின்றான்- இவன்
தந்தையைப் போலவே ஆடுகின்றான்!

ஆடிடு ஆடிடு என் மகனே- நீ
ஆடிடும் ஆட்டம் அற்புதமே...!!!
✍️செ. இராசா

No comments: