10/10/2019

மொழி என்பது



#மொழி என்பது
ஒலிகளின் கலவை மட்டுமல்ல!
மொழி என்பது
மொழிபவரின் அடையாளம்!

மொழி என்பது
மனித இனத்திற்கு மட்டுமானதல்ல!
மொழி என்பது
சமூகமாய் வாழும்
சகலஉயிர்களின் சாதனம்!

ஆனால்...இங்கே
ஒலி எழுப்பும் உயிரினங்களில்
ஒலியைப் பதிவு செய்து
தன் அறிவையும் வரலாற்றையும்
மேம்படுத்திய இனம் உண்டென்றால்
அது
மனித இனம் மட்டுமே...!!

இருந்தும்...
ஆதியில் தோன்றிய
அனைத்து இனங்களுக்கும்
அந்த அறிவு இருந்ததா? என்றால்
அது நமக்குத் தெரியாது!
அது தன் தலைமுறைகளுக்குக்
அவற்றைக் கடத்தியதா என்றால்
அதுவும் ஆராய்ச்சிக்குரியதே...

ஆனால்...
சில இனங்கள் மட்டும்..
மிகச் சரியான முறையில்
தன் மொழியைத்
தன் தலைமுறைகளுக்கும்
கடத்தும் பேரறிவு கொண்டிருந்ததை- நாம்
கண்கூடாகக் காண்கிறோம்

ஆம்...
இரண்டே அசைகளில்
எழில்மிகு சீர்களாக்கி;
அடிகளுக்குள் அடக்கியதைத்
தளைதட்டாது பிண்ணி;
இலக்கண வரம்பு கட்டியதில்
இலக்கிய நீரை வார்த்து;
மொழியின் வடிவத்தை
ஒலியின் வரிகளாக்கி
கல்லிலும் ஓலையிலும்
சுடுமண் பானையிலும்;
கற்ற வித்தைகளை
கடத்தும் வழியறிந்து;
தமிழி தமிழென்று.....
தமிழைக் கடத்திய
ஓர் இனம் உண்டென்றால்
அது நம் தமிழினம் மட்டுமே...!!!

அப்பேர்ப்பட்ட தமிழைவிட்டு
ஆழமே இல்லா மற்ற மொழிகளை
அறிவின் அடையாளமாய் நினைப்பது
அறிவீனமல்லவா?!

ஒன்றை உணருங்கள்!!
“தமிழ்” அவமானமல்ல
அது நம் அடையாளம்!!!
ஆம்
தமிழே நம் அடையாளம்

நிலம் போனால் மீளும்
மொழி போனால் மீளுமா?
மொழி ஓர் இனத்தின் அடையாளம்!
தமிழா...
நீ தமிழின் அடையாளம்!

தமிழ் பேசு!
தமிழில் பேசு!!!

✍️செ. இராசா

No comments: