02/01/2018

அறத்துப்பால் அறிவோம்




என்னுரை
***********
அறநூலாம் திருக்குறளின்
அறத்துப்பால் அழகுபற்றி- யாம்
அறிந்த விசயங்களை- பிறர்
அறிய எழுதுகின்றேன்-என்
அறிவில் பிழை இருப்பின்
அறியாதோன் பிழைபொறுக்க
அறிஞர்கள் கால்களிலே- இந்த
அறிவிலிநான் வீழுகின்றேன்!
வணக்கம்
**********
மனித வாழ்வின் தரமுயர்த்த
மதிப்புமிக்க நூல்தந்த
மாண்புமிகு வள்ளுவரை
மனதாலே மொழியாலே
மகிழ்ந்தே நான் வணங்குகின்றேன்!

நான்கு இயல்கள்
*************************
தனிமனித வாழ்வின் நெறி
தலைசிறக்க வேண்டிடவே
நான்கு மறை போலமைந்த
நான்கு இயல் கண்டிடுவீர்;

௧.       அறநூலின் முன்னுரையாய்;- #பாயிரவியல்
௨.       வாழ்வின் முதற்பகுதி சிறப்பதற்கு;- #இல்லறவியல்
௩.       வாழ்வின் இறுதிப்பகுதி சிறப்பதற்கு:- #துறவறவியல்
௪.       மிருந்தும் எதிர்விளைவா?:- #ஊழியல்

. #பாயிரவியல்
**********************
1.       படைத்தவன்  சிறப்பறிய:- #கடவுள்_வாழ்த்து

2.       படைப்பிலேயே சிறப்பான
மழையின் சிறப்பறிய:- #வான்சிறப்பு

3.       படைப்பிலேயே உயர்வான
மனிதரின் தரமறிய:- #நீத்தார்_பெருமை

4.       மனிதரிலேயே சிறப்பான
மனிதராய் ஆவதற்கு:- #அறன்_வலியுறுத்தல்!

. #இல்லறவியல்
************************
1.       இல்லறம் நடத்துகின்றன
ஆண்மகன் கடைமையறிய:- #இல்வாழ்க்கை

2.       இல்லறம் நடத்துகின்ற
பெண்மகள் கடமையறிய:- #வாழ்க்கை_துணைநலம்

3.       பிள்ளைக்கு செய்கின்ற
பிள்ளைகள் செய்கின்ற
கடமைகள் நன்றறிய:- #புதல்வரைப்_பெறுதல்

4.       குடும்பத்தின் ஆதாரமாம்
அன்பினை எடுத்துச்சொல்ல:- #அன்புடைமை

5.       குடும்பத்தின் அன்பானது
வெளியேவும் வழிந்தோட :- #விருந்தோம்பல்

6.       வழிந்தோடும் அன்பானது
சொல்லாக மொழிவதற்கு:- #இனியவை கூறல்

7.       அன்போடு அன்பிணைந்து
நன்றியாய் இருப்பதற்கு:- #செய்ந்நன்றி_அறிதல்

8.       நன்றிக்கடன் பட்டாலும்
நடுவுநிலை பாதுகாக்க :- #நடுவு_நிலைமை

9.       வெற்றிகள் குவிக்கையிலே
பணிவுநிலை எடுத்துச்சொல்ல:- #அடக்கமுடைமை

10.   வெற்றியோ தோல்வியோ
ஒழுக்கம் பிறழாதிருக்க:- #ஒழுக்கமுடைமை

11.   ஒழுங்கீனத்தின் உச்சபட்ச
தவறினைச் சுட்டிக்காட்ட :- #பிறனில்_விழையாமை

12.   பிறரின் கொடுமைகளை 
பொறுத்திடும் தன்மை சொல்ல:- #பொறையுடைமை

13.   பிறர்மேல் பொறாமைகொள்ளும்
பொல்லாதத் தவற்றைச்சொல்ல:- #அழுக்காறாமை

14.   பிறர்பொருள் அபகரிக்கும் 
தவறினை எடுத்துச்சொல்ல :- #வெஃகாமை

15.   பிறர்குறை பேசுகின்ற 
குணத்தினை தடுத்துச்சொல்ல: #புறங்கூறாமை

16.   பிறரிடம் பேசுகின்ற
வீண்பேச்சை நிறுத்தச்சொல்ல:- #பயனில_சொல்லாமை

17.   பிறருக்கு தீங்குதரும்
தீவினையின் விளைவைச்சொல்ல:- #தீவினையச்சம்

18.   பிறருக்கு உதவிசெய்யும்
குணத்தின் பெருமை சொல்ல:- #ஒப்புரவறிதல்

19.   ஏழைக்கு அள்ளித்தரும்
கொடையின் பெருமை சொல்ல:- #ஈகை

20.   அள்ளித்தந்த வாழ்வில்வரும் 
புகழின் பெருமை சொல்ல:- #புகழ்

. #துறவறவியல்
********************
1.       அன்பு கருணையாகி
அனைத்துயிர் மேல்பரவ:- #அருளுடைமை

2.       தனக்காக கொன்றுதின்னால்
கருணையும் சாகுமென்று:- #புலான்மறுத்தல்

3.       இலட்சியம் அடைவதற்கு 
மனப்பயிச்சி தேவைசொல்ல:- #தவம்

4.       இலட்சியம் அடைந்ததைப்போல்
நடிப்பவர்கள் தவறைச்சொல்ல:- #கூடாவொழுக்கம்

எண்ணம் சொல் செயலாலே
வருகின்ற விளைவுகளை  
வரிசையாக இங்கு பாரீர்:

5.       களவு எண்ணம் தவறென்று:- #கள்ளாமை
6.       தீங்குதரா உண்மை பேச:- #வாய்மை
7.       சினத்தின் தீங்கு சொல்ல:- #வெகுளாமை
8.       துன்பத்தின் தீங்கு சொல்ல :- #இன்னா_செய்யாமை
9.       கொலைச்செயலின் தீங்கு சொல்ல:- #கொல்லாமை

10.   நிலையில்லா உலகத்திலே
நிலையென்று எண்ணுவதின்
நிலைபற்றி எடுத்துரைக்க:- #நிலையாமை

11.   அனைத்தையும் அறிந்த பின்னே
பற்றில்லா குணம் வளர்க்க:- #துறவு

12.   அறிவால் தெளிந்தவரே
   அனைத்தையும் பெற்றதாக
அறிவின் பெருமை சொல்ல:- #மெய்யுணர்தல்

13.   அறிவையும் அழிப்பதோடு
அனைத்தையும் அழிக்கின்ற
ஆசையை சீரமைக்க:- #அவாவறுத்தல் 

. #ஊழியல்:
************
1.       அறவழியில் சென்றபின்னும்
வளமில்லா வாழ்வென்றால்
கர்மவினை என்றறிய:- #ஊழியல் 

என்னுரை
****************
இல்லறத்தின் உச்சம் அன்பாகும்!
துறவறத்தின் உச்சம் அறிவாகும்!
இரண்டையும் பயில்வது சிறப்பாகும்!
வாழ்க வளமுடன்! நன்றி!

----செ.இராசா---


திருக்குறள் கட்டுரை-1 (26.12.2017)
***********************************

அனைத்து நல் உள்ளங்களுக்கும் உங்கள் நண்பன் செ. இராசாவின் அன்பார்ந்த வணக்கங்கள்.

அனைவரும் திருக்குறளைப் பற்றி அதிகமாக எழுதிவிட்டதாலும், அனைவருக்கும் திருக்குறளைப் பற்றி நன்றாகவேத் தெரியும் என்பதாலும்  தமிழ்ப்பாடம் அதிகம் படிக்காத ஒரு தமிழ் இளைஞர்களை மையமாக வைத்து, மிகவும் சுருக்கமாக, அவர்களுக்கு சீக்கிரம் புரியும் வகையில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன். இதில் அறத்துப்பால் அமைக்கப்பட்ட விதத்தைப்பற்றி மட்டும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாகவும் சமர்ப்பிக்கிறேன்.

திருக்குறள் என்றால் என்ன?

நாம் புதிதாக ஒரு மின்சாதனப்பொருட்கள் (Household items) வாங்கினால் அதோடு சேர்த்து ஒரு கையேடு (Manual) தருவார்கள். அதைப் படித்தால் நாம் அதை நன்றாக இயக்கவும் பராமரிக்கவும் முடியும். அதைப்போல, இவ்வுலகில் மனிதனுக்கும் அவன் சிறப்பாக வாழ்வதற்கு பல மதங்கள் சார்ந்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவையாவன பகவத்கீதை, பைபிள், குர்ரான்......... போன்ற புனித நூல்களாகும்.

ஆனால், திருக்குறளானது அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான கையேடாகும். மேலும், திருக்குறள் அனைத்து மனிதர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான வாழ்க்கை நெறிமுறை விளக்க நூலாகும்.

திருக்குறள் கட்டுரை-2 (27.12.2017)
****************************************************
(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான நேற்றைய பதிவின் தொடர்ச்சியாகும்)
அறம் என்றால் என்ன?
அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே அறமாகும்.

அறநூல்கள் என்றால் என்ன?
 
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லித்தரும் அனைத்து நூல்களும் அறநூல்களாகும்.

திருக்குறள் முழுவதுமே அறநூல் என்றால், அறத்துப்பால் தவிர்த்து மற்ற இரண்டு பால்களும் ஏன் உள்ளன?
 
அறத்தின் சிறப்பையும் அதன் பயனையும் அறத்துப்பாலில் கூறும் வள்ளுவர், பொருளீட்டுவதில் கடைப்பிடிக்க வேண்டிய அறத்தை பொருட்பாலிலும், இன்பத்தை அனுபவிப்பதில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறத்தை கவிச்சுவையோடு காமத்துப்பாலிலும் கூறுவதால் மற்ற இரண்டு பால்களும் திருக்குறள் என்னும் அறநூலில் உள்ளன.

பாயிரம் என்றால் என்ன? ஏன்?

எந்த ஒரு காவியமோ அல்லது அறநூலோ படைப்பதற்கு முன்பாக கடவுளை வாழ்த்தியோ அல்லது நூல் முழுமையிலும் உள்ள கருத்தை ஒரு முன்னுரை போலவோ எடுத்துச்சொல்வது வழக்கம். அப்படி பாடியதே பாயிரம்.

படைத்தவரின் (கடவுளின்) சிறப்பினை கடவுள் வாழ்த்தில் கூறிய வள்ளுவர், பொதுவான இறைவனையே கூறுகின்றார். அறம், பொருள், இன்பம் பயில்வதன் நோக்கமே வீடுபேறு அடைவதற்காகத்தான் என்ற கருத்தை நாம் கடவுள்வாழ்த்தின் மூலமாகக் அறியலாம்.

படைத்தவரை படைப்பில் காணலாம் என்பதால், இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமான மழை பற்றி வான் சிறப்பில் சொல்கின்றார்.

மனிதரில் யார் உயர்ந்தவர்கள் என்றும், அறம் ஏன் பயிலவேண்டும் என்றும் மேலும் நூல் படைத்ததன் நோக்கத்தையும் மற்ற இரண்டு அதிகாரங்களிலும் சொல்கின்றார். (துறவியின் சிறப்பினை நீத்தார் பெருமை அதிகாரத்திலும், அறத்தின் சிறப்பை அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும் காணலாம்.)


திருக்குறள் கட்டுரை-3 (28.12.2017)
***************************************

(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான முதல் இரண்டு பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?
***********************************************
அறத்துப்பாலில் மொத்தம் நான்கு இயல்கள் (பிரிவுகள்) உள்ளன. அவையாவன;

1. பாயிரவியல் (முந்தைய பகுதியில் பார்த்தோம்)
2. இல்லறவியல்
3. துறவறவியல்
4. ஊழியல்

உண்மையில் பார்த்தால் இரண்டு இயல்களையே (2 & 3) நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பாயிரவியல் என்பது அனைத்து பால்களுக்குமே உள்ள பொதுவான ஒரு இயலாகும்.

நான்காவது வரும் ஊழியல் என்பது, விதிக்கொள்கை சம்பந்தமான ஒன்று. அதை, ஏன் அறத்துப்பாலில் வைத்தனர் என்பதை பின்பு பார்ப்போம்.
ஆக, நாம் இப்பொழுது இரண்டு இயல்களான இல்லறவியல் மற்றும் துறவறவியலை வைத்ததன் காரணத்தை மட்டும் இங்கே விரிவாகக் காண்போம்.

இல்லறவியல் மற்றும் துறவறவியல் ஏன் வைக்கப்பட்டுள்ளது?

பொதுவாக ஒரு தனிமனிதனுடய வாழ்வானது அவன் வயதினை அடிப்படையாக வைத்து நான்காக வகுக்கப்படுகிறது.

அவையாவன;
1. பிரம்மச்சரிய நிலை (கற்கும் பருவம்)
2. கிரகஸ்த நிலை (குடும்பஸ்தன்)
3. வானபிரபஸ்த நிலை (துறவுக்குத் தயாராகும் நிலை)
4. துறவற நிலை (துறவற நிலை)

மனித வாழ்வானது இறைநிலையை நோக்கியப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு படியாக மனிதன் முறையாகக் கடந்தால்தான் அந்நிலையை அடையமுடியும்.

பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை உள்ள பருவம் கல்வி பயில்வதற்கான பருவம். அதுவே முதல் நிலை.

திருமணம் ஆனதலிருந்து தன் மகன்/மகள் திருமணம் ஆகும்வரை உள்ள பருவம் கிரகஸ்த நிலை. அதுவே இரண்டாம் நிலை.

மகன்/ மகள் திருமணமான பிறகு, அவனுக்கு வழிகாட்டிக்கொண்டு ஆனால் முழுமையாக ஆளுமை செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிவருதல் வானபிரபஸ்த நிலை. அதுவே மூன்றாம் நிலை.

முழுமையாக விலகி, இறைவனை நோக்கிப் பயணித்தல் துறவுநிலை. அதுவே நான்காம் நிலை.

வள்ளுவர் மேலே உள்ளவற்றை மேலும் சுருக்கி முதல் இரண்டு நிலைகளை இல்லறவியல் என்றும், அடுத்த இரண்டு நிலைகளை துறவறவியல் என்றும் சுருக்கிவிட்டார்.

ஆக, ஒரு தனி மனிதனுடைய ஒழுக்க நெறியானது அவனுடைய இரண்டு பருவநிலைகளுக்கும் சொல்ல வேண்டி உள்ளதால் இவை இரண்டும் அறத்துப்பாலில் வருகின்றது. இல்லறத்தின் முடிவில்தான் துறவறம் ஆரம்பிக்கிறது. இவை இரண்டுமே தனி மனித வாழ்வியல் முறைக்குத் தேவையாக உள்ளதால். இவை இரண்டையும் அறத்துப்பாலில் வள்ளுவர் வைக்கின்றார்.

திருக்குறள் கட்டுரை-4 (29.12.2017)
***************************************


(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான முதல் மூன்று பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

இனி நாம் இல்லறவியல் மற்றும் துறவறவியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் வரிசை முறை அமைக்கப்பட்ட விதத்தைப்பற்றி காண்போம்.
ஒரு குடும்பம் என்பது குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி மற்றும் அவர்தம் மக்கள் இணைந்த அமைப்பாகும்

குடும்பத்தலைவனின் கடமையைஇல்வாழ்க்கைஅதிகாரத்திலும், குடும்பத்தலைவியின் கடமையைவாழ்க்கைத் துணைநலம்அதிகாரத்திலும், பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் அந்த மக்கள் திருப்பிச் செய்ய வேண்டிய கடமையினைபுதல்வரைப் பெறுதல்அதிகாரத்திலும் காணலாம்.

ஒரு குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழ்வது அன்பாகும். ஆகவே, “அன்புடைமைஅதிகாரம் அடுத்ததாக வருகிறன்றது.

ஒரு குடும்பத்தில் ஆரம்பித்த அன்பானது அப்படியே அதிகரித்து வெளியிலும் பரவ ஆரம்பிக்கிறது. அடுத்தவர்களிடம் நம் அன்பை காட்டும் வழி அவர்களை அழைத்து விருந்து கொடுத்து இன்ப மொழி பேசி உறவாடுவதிலே சாத்தியம் என்பதால்விருந்தோம்பல்மற்றும்இனியவைகூறல்அதிகாரங்கள் வருகின்றன.

அழைத்து விருந்து கொடுத்த குடும்பத்திற்கு பதில்விருந்து கொடுத்து பிற குடும்பங்களுக்கு இடையில் ஒரு இணக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டு நன்றி பாராட்ட வேண்டும் என்றுசெய்ந்நன்றி அறிதல்அதிகாரம் வருகின்றது.

இப்பொழுது நாம் ஒருவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பதற்காக வழக்கு என்று வரும்போது அவர்கள் சார்பாக சாய்ந்துவிடக்கூடாது என்றுநடுவு நிலைமைவருகின்றது.

ஒரு விசயத்தில் வென்று விட்டால் துள்ளுவதும், தோற்றுவிட்டால் துவண்டு போய் ஒழுக்க மீறல் விசயங்களில் ஈடுபடுவதும் தவறென்று சொல்வதற்காகஅடக்கமுடைமைமற்றும்ஒழுக்கமுடைமைஅதிகாரங்கள் வருகின்றன.
ஒழுக்கமீறலில் உச்சபட்ச ஒழுங்கீனமாக அமைவது அடுத்தவர் மனைவியை பார்ப்பதாகும். ஆகவே தான் ஒழுக்கமுடமைக்கு அடுத்தாற்போலபிறனில் விழையாமைவருகின்றது.

பிற குடும்பங்களுக்கு இடையிலான உறவை வளர்ப்பதற்குத் தேவையான மற்றும் தவிர்க்க வேண்டிய விசயங்களை அதற்கடுத்தாற்போல் உள்ள அதிகாரங்களில் வரிசைபடுத்தப் படுகின்றது. அடுத்தவர்கள் தீமை செய்தாலும் பொறுமை காக்க வேண்டும் என்றுபொறையுடைமைஅதிகாரத்திலும், அடுத்தவர் வைத்துள்ள வளம்பார்த்து பொறாமை படக்கூடாது என்பதனைஅழுக்காறாமைஅதிகாரத்திலும், அடுத்தவர் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பதைவெஃகாமைஅதிகாரத்திலும், அடுத்தவர்கள் இல்லாத நேரத்தில் புறணி பேசக்கூடாது என்பதனைபுறங்கூறாமைஅதிகாரத்திலும், அடுத்தவர்களிடம் சும்மா வெட்டிக்கதை பேசக்கூடாது என்பதனைபயனில சொல்லாமைஅதிகாரத்திலும், அடுத்தவருக்கு தீங்கு செய்யக்கூடாது என்பதனைதீவினையச்சம்அதிகாரத்திலும் காணலாம் 
.
குடும்ப வாழ்க்கையின் அழகே ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொள்வதில்தான் உள்ளது என்பதற்காகஒப்புரவறிதல்அதிகாரம் வருகின்றது. எதுவும் இல்லாத வறியவர்களுக்கு, எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் உதவியே பேருதவியாகும், அதுவேஈகைஎன்ற அதிகாரத்தில் வருகின்றது.

இவை அனைத்தையும் முறையாகச்செய்து நாம் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதான புகழ் நிறைந்த வாழ்வாக அமையவேண்டும் என்றுபுகழ்என்ற அதிகாரம் இல்லறவியலில் இறுதியாக வருகின்றது.

திருக்குறள் கட்டுரை-5 (30.12.2017)
******************************************************
(வணக்கம் நண்பர்களே, இது திருக்குறள் பற்றிய முதல் நான்கு பகுதிகளின் தொடர்ச்சியாகும்)
இதற்கு முந்தைய பதிவில் இல்லறவியலில் அமைத்துள்ள அதிகாரங்களின் வரிசை அமைப்பு பற்றியும் அவை அமைந்த விதம் பற்றியும் பார்த்தோம்.

அன்பை ஆதாரமாக வைத்து ஆரம்பித்த இல்லறமானது அடுத்தவர்க்கு உதவியும், வறியவர்களுக்கு ஈகையும் செய்து, புகழ்பெற வாழும் வாழ்க்கையைப்பற்றிக் கூறியதைப் போன பதிவில் விபரமாகப் பார்த்தோம்.

இல்லறத்தின் முடிவில், அதன் தொடர்ச்சியாக துறவறம் உள்ளதால்அதனை வரிசைப்படுத்திய ஒழுங்குமுறையை நாம் இப்போது காண்போம்.

அன்பானது குடும்பத்தில் தொடங்கி சமுதாயத்தில் பரவி அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிடத்திலும் அது கருணையாக மாறுவதை "அருளுடைமை" அதிகாரத்திலும், அதன்பொருட்டு தனக்காக பிற உயிர்களைக் கொன்று புசிக்கக்கூடாது என்பதை "புலால் மறுத்தல்" அதிகாரத்திலும், சரியான பயிற்சிமுறையுடன் நாம் தினம் முயன்றால் நாம் எண்ணிய அனைத்தும் நடக்கும் என்பதனை "தவம்" என்ற அதிகாரத்திலும், தவத்தால் தோன்றும் சிறிய அளவிலான ஆன்மீக ஞானத்தால் தான் அனைத்து ஞானமும் கிடைத்ததாகத் எண்ணி சிலர் செய்யும் வெளிவேஷங்களும் அது தேவையற்ற நடிப்பு என்பதையும் "கூடாவொழுக்கம்" அதிகாரத்திலும், எண்ணத்தால் கூடத் தவறியும் திருட்டு எண்ணம் கொள்ளக்கூடாது என்பதை "கள்ளாமை" அதிகாரத்திலும் கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் துறவறம் பயில்பவர்கள் எண்ணம், சொல், செயலில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் பற்றி "வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை மற்றும் கொல்லாமை" அதிகாரங்கள் வாயிலாகக் கூறுகின்றார்.

மேற்கூறிய அனைத்து ஒழுக்கநெறிகளையும் கடைபிடித்து, இந்த உலகில் எதுவும் நிலையில்லை என்பதனை அறிந்து, எந்த ஒரு பொருளிலும் பற்றற்று தொடர்பு கொண்டு, உண்மையான ஞானத்தை அல்லது பேரறிவை அறிவதோடு மட்டுமல்லால் தெளிந்து உணரவேண்டும் என்ற கருத்துக்களை "நிலையாமை, துறவு மற்றும் மெய்யுணர்தல்" அதிகாரங்கள் வாயிலாக வரிசையாகத் தெளிவாகக் கூறுகின்றார்

அறிவை அடைந்து உண்மையை உணர்தலே மனிதப்பிறப்பின் நோக்கம் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறும் வள்ளுவர், என்னதான் நாம் அறிவை உணர்ந்தாலும், மீண்டும் மீண்டும் நம்மை கீழே இழுக்கும் மாய வலையான ஆசையில் சிக்கிக்கொண்டால் அகல பாதாளத்தில் தான் விழுவோம் என்பதால், ஆசையை ஒழித்து உண்மை ஞானத்தை அடைவோமாக என்று மீண்டும் எச்சரிக்கும் விதமாக "அவா அறுத்தல்" அதிகாரத்தில் முடிக்கின்றார்.
அன்பில் ஆரம்பித்த இல்லறமானது, உண்மை ஞானத்தை அடையும் துறவறத்தில் முடிந்தாலே மனிதவாழ்வு சிறக்கும் என்பதை அழகாக அந்த அதிகாரங்களை வரிசைப்படுத்திய விதத்திலேயே நாம் அறிந்துகொள்ளலாம்.
-------(தொடரும்)

திருக்குறள் கட்டுரை-6 (31.12.2017)
******************************************************
(வணக்கம் நண்பர்களே, இது திருக்குறள் பற்றிய முதல் ஐந்து பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

முந்தைய பதிவுகளில் ஒரு தனி மனிதன், அவன் பருவ முதிர்ச்சிக்கு ஏற்றார்போல் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை இல்லறமென்றும், துறவறமென்றும் திருவள்ளுவர் பட்டியலிடுகின்றார் என்பதை பார்த்தோம்.
இல்லறத்தின் உச்சம் உதவிசெய்து புகழ் பெற வாழும் வாழ்வு என்றும், அதன் தொடர்ச்சியான துறவறத்தின் உச்சம் உண்மையான ஞானத்தை அடைந்து அதற்குத் தடையாக உள்ள ஆசையை ஒழிப்பது என்றும் கூறியதோடு அறத்துப்பாலை அவர் முடித்திருக்கவேண்டும். ஆனால் ஊழியல் என்ற விதிக் கொள்கையை அறத்துப்பாலின் முடிவில் ஏன் வைத்தார் என்பதை நாம் இங்கு பாப்போம்.

திருக்குறளில் ஒரே அதிகாரம் உள்ள ஒரு இயல் என்றால் அது ஊழியல் மட்டுமே. எதையும் சரியாகச் செய்யும் வள்ளுவர் ஊழியலை காரணமில்லாமலா அறத்துப்பாலின் முடிவில் வைத்திருப்பார்?....மிகவும் தெளிவான காரணத்தோடு தான் அவர் வைத்துள்ளார். என்னதான் ஒருவன் சரியாக இல்லறம் மற்றும் துறவற விதிகளை பின்பற்றினாலும், சில பல சமயங்களில் அவனுக்கு சறுக்கல் ஏற்படுவதற்குக் காரணம் யாதென்றால் அது அவனின் முந்தைய கர்மவினை என்று சொல்லப்படுகின்ற  விதியே ஆகும். ஆகவே நாம் என்னதான் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் தோல்வியும் வருத்தமும் வருவதற்குக் காரணம் ஊழ் என்று  உணர வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

அனைத்தும் விதியின் செயலென்று, செய்ய வேண்டிய முயற்சியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உழியலை முதலில் சொல்லாமல் அறத்துப்பாலின் இறுதியில், பொருட்பால் தொடங்குவதற்கு முன்பாகச் சொல்லுகின்றார். ஏனெனில் ஒருவன் பொருள் ஈட்டி இன்பம் அனுபவிப்பதற்கும் ஊழ் சரியாக அமைய வேண்டும் என்பதால், ஊழியலை சரியான இடத்தில் வள்ளுவப் பெருமகனார் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றார்.

அருட்தந்தை வேதாந்த மஹரிஷி அவர்களும் இதையே பின்வருமாறு விளக்குகின்றார். ஒருவன் பிறந்ததிலிருந்து என்னதான் தவம் தற்சோதனைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவனுடைய பிராரப்த கர்மா என்று சொல்லப்படுகின்ற முன்வினைப் பதிவு வேறு மாதிரி இருந்தால், அதைப்பொறுத்தே இப்பொழுது உள்ள வாழ்வு அமையும் என்கின்றார். அதற்காக நாம் அனைத்தும் விதி என்று சும்மாவே முயற்சி இல்லாமல் இருந்தால் வருங்காலம் மேலும் வீணாகும் என்று அதற்கான வழிமுறைகளையும் விளக்குகின்றார்.

வள்ளுவர் வகுத்த ஊழியலானது தெளிவாக உணர்த்துவது யாதெனில்,  நாம் இன்று அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் இன்பங்கள் நேற்றைய வினைகளின் விளைவுகளாகும் என்பதை உணர வேண்டும். மேலும், நாம் அறம் செய்யும் நோக்கத்தில் என்றும் தவறிவிடாது தொடர்ந்து அறம் செய்து இன்றைய வாழ்வும் நாளைய வாழ்வும் சிறப்புற வாழ வேண்டும் என்பதாகும். இப்படியாக ஒரு தனிமனிதன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறம் இவையென அறத்துப்பாலில் திருவள்ளுவர் கூறுகின்றார்.

------அறத்துப்பால் இனிதே முடிந்தது-----

(முற்றும்)



No comments: