24/01/2018

78வது கவிச்சரம்---வாழ்வின் தேடல்கள்


தமிழ்த்தாய் வணக்கம்:
*********************
அறம் பொருள் இன்பம் சொல்லி
அறிவுக்கண்ணை திறந்து வைத்த
தமிழ்மறையை நமக்குத்தந்த
தலைமகனைப் பெற்றெடுத்தத்
தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!


கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
அற்புதமாய் கவி படைத்து
அனுதினம் அரங்கேற்றி
குன்றின்மேல் விளக்குபோல
குறைவில்லா ஒளி வீசும்
திருமதி. குணா பாலா அக்காவை
மனமாலும் மொழியாலும்
மகிழ்ந்தே நான் வணங்குகின்றேன்!

அவை வணக்கம்:
****************
கம்பனைப் பெற்றடுத்த
கவித்தாயின் மனம்குளிர
கவிதைகள் பலசெய்து
கவிச்சரம் தொடுக்கின்ற
கவிஞர்களின் அவைதனை
கரமுயரத்தி சிரம் தாழ்த்தி
கனிவோடு வணங்குகின்றேன்!

வாழ்வின் தேடல்கள்
*******************
கருவறை தோன்றிய காலம் தொட்டு
கல்லறை சென்றிடும் காலம் வரை
வாழ்வில் தேடல்கள் யாதும் இன்றி
வாழ்வினைக் கழிப்பவர் மாக்களாவர்!

குறிக்கோள் யாதென முடிவு செய்து
குறிக்கோள் நோக்கிய பயணம் செய்து
குன்றின்மேல் விளக்கென ஒளியை வீசும்
குணங்களில் உள்ளவர் மனிதராவர்!

தேவையும் ஆசையும் குறையும் போதும்
தேடலில் முயற்சிகள் பெருகும் போதும்
தேவையைத் தெளிவுடன் தேடி நின்றால்
தேடிடும் இலக்குகள் வெற்றியாகும்!

அன்பு
******
ஆயிரம் வசதிகள் வாய்த்தாலும்
ஆயிரம் பதவிகள் கிடைத்தாலும்
அன்பில்லா மனிதரின் வாழ்க்கையிலே
அமைதியும் திருப்தியும் கிடைப்பதில்லை!

இல்லறம் நன்றாய் இருப்பதற்கும்
துறவறம் நன்றாய் அமைவதற்கும்
அடிப்படை மூலம் எதுவென்றால்
அன்புள்ள இதயம் என்றறிவோம்!

நன்றி நவில்தல்
***************
வாய்ப்பளித்த அனைவரையும்
வாழ்த்தி நானும் விடைபெறுகின்றேன்!
வாழ்க வளமுடன்!

——செ. இராசா——

No comments: