17/04/2023

சென்னை மெட்ரோ



கத்தார் நாட்டில் சில ஆண்டுகளுக்குமுன் மெட்ரோ திட்டம் கொண்டு வந்தபோது, இந்தத் திட்டம் உண்மையில் தேவையில்லாத திட்டம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். காரணம், இங்கே உள்ள அரபிகள் ஒரு பொட்டிக்கடைக்குச் சென்றால்கூட வாகனத்தை விட்டு இறங்கிப் போய் வாங்க மாட்டார்கள். கடைக்காரர்தான் ஓடிவந்து வேண்டியதைக் கொடுப்பார். அப்படி இருக்கையில், யார் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போய் மெட்ரோவில் ஏறுவார்கள்‌ என்று நினைத்தோம்.மேலும் நாடுவேறு மிகவும் சிறிது. இதற்கு எதற்கு மெட்ரோ என்றுதான் உண்மையில் நினைத்தோம். ஆனால் உலகக்கோப்பை வந்தபோதுதான் அதன் தேவை அனைவருக்கும் புரிந்தது.

அதுபோலவே நம்ம ஊரிலும் மெட்ரோ வந்தபோது, பெட்டிகள் குறைவாக உள்ளதே... எப்படி சென்னை மக்கள் தொகையை மெட்ரோ சமாளிக்கும் என்றெல்லாம் ஐயம் இருந்தது. அதைவிட எனக்கு என்ன ஐயம் என்றால், சுத்தம் சுகாதாரமாக இருக்குமா என்பதுதான். ஆனால் நான் நினைத்ததைவிட பலமடங்கு மேலாக, அதி அற்புதமாக உலகத்தரத்தில் சென்னையில் மெட்ரோ இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டபோது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

காரணம், எங்கோ ஒரு சிறிய நாட்டில் செயல்படுத்துவது பெரிய காரியமில்லை. அந்நாட்டைவிட ஆறு மடங்கு மக்கள்தொகை கொண்ட ஒரு ஊரில் செயல்படுத்துவது பெரிய காரியமில்லையா?! அதைவிட ஆச்சரியம்....மெட்ரோ ரயில்முதல் நிறுத்த நிலையங்கள்வரை அனைத்து இடங்களும் சுத்தமாக இருந்தது. மேலும், நகரும் படிக்கட்டுகள் மிகப்பெரிய உயரத்தில் நிறுவியுள்ளார்கள். உள்ளே பயணச்சீட்டு வாங்கி அதைக் காண்பிக்கையில் தானியங்கி கதவுகள் திறப்பது மூடுவது எல்லாம், நம்ம ஊரிலும் மிகச் சிறப்பாக எந்த சிரமமும் இல்லாமல் நடப்பதைக் காண்கையில்,
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களில் இத்திட்டம் கண்டிப்பாக காலம் உள்ளவரை அவர் பெயர் சொல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

என்னால் முடிந்தவரை சென்னை மெட்ரோவை காணொளியாக்கியுள்ளேன். பிடித்தால் பார்த்துப் பகிருங்கள் உறவுகளே...

https://youtu.be/Xw9Sj2fT6Nw

✍️செ. இராசா

No comments: