08/01/2024

குரல்


என் குரலும்
அரங்கேற்றம் ஆகாதா?
என் குரலையும்
கேட்டுவிட மாட்டார்களா?
இப்படிக்
குரலுக்காகக்
குரல்கொடுப்போரை
அறிவீர்கள்தானே?!

ஆகா....
என்னே கம்பீரமான குரல்?
ஐயே...
என்ன கேவலமான குரல்?
இப்படிக்
குரலைவைத்தே
குறிப்பிடுவோரையும்
அறிவீர்கள்தானே?!

எனில்..
என்றேனும் இந்தக் குரலைப்பற்றி
சிந்தித்துள்ளீரா?!

காற்றை உள்வாங்கி
ஒலியாய் உருமாற்றி
மொழியாய் வடிவேற்றி
குரலாய்ப் பதிவேற்றும் இந்த
மனித விலங்கைப்போல்
மற்றொரு விலங்குமுண்டா?!

ஆம்...
இந்த இனத்தில் மட்டும்தான்
வயதுக்கு வந்தபின்
மெல்லினம் வல்லினமாகி
ஆண்குரல் கட்டைக்குரலாகும்!
அதுவரைக்கும்
என்ன... என்றவன்
அதன்பின்
என்ன்ன்ன....என்பான்!

இந்த இனத்தில் மட்டும்தான்
திருமணமானபின்
மெல்லினக் குரலுக்கும்
வல்லின வலிமைவரும்!
அதுவரைக்கும்
என்ன்ன்ன என்றவன்
அதன்பின்
ஹி..ஹி..என்பான்!

யாரையும் ஆளைப்பார்த்து மட்டும்
எடைபோடாதீர்...
ஆஜானுபாவாய் இருப்பான்
நயன் தாராபோல் பேசுவான்..
அரைச்சாணே இருப்பான்
அடோல்ப் ஹிட்லர்போல் கர்ஜிப்பான்.
காரணம்
குரலே தவிற...உருவமல்ல!

இங்கே எவ்வளவு பெரிய
பேச்சாளராய் இருந்தாலும் சரி
பாடகராய் இருந்தாலும் சரி
குரலொலியைப் பொறுத்தே
கரவொலி மேலோங்கும்!
எனில்;
கரவொலி மேலோங்க
குரலொலியைப் பாதுகாப்பீர்!

✍️செ. இராசா

No comments: