13/06/2023

சகுந்தலா

 


(மகாபாரதக் கதையின் ஆதி மன்னனும் பரதச் சக்கரவர்த்தியின் தந்தையுமான துஷ்யந்தன் என்னும் மன்னன் காட்டில் முனிவர் குடிலில் வளரும் சகுந்தலா தேவிமேல் மையல் கொண்டு கந்தர்வ முறையில் காதல் திருமணம் செய்துவிட்டு, மீண்டும் வந்து கூட்டிப்போவதாய் வாக்குறுதி தருகின்றான். சகுந்தலா தேவி அவன் நினைவாகவே இருக்கும் தருணத்தில் துர்வாசர் வருகிறார். அதைக்கவனிக்காத தேவிக்கு நீ நினைக்கும் உன்னவன் உன்னை மறப்பான் என்று சாபம் விடுகிறார். அதுதெரியாமல் இருவரும் மன்றாடும் காட்சியை குறளுரையாடல் செய்துள்ளேன்)

#சகுந்தலா_1
வருவதாய்ச் சொல்லிவிட்டு வந்தீரே ஐயா
திரும்பிவர வில்லையேன் செப்பு?

#துஷ்யந்தன்_2
சந்திர வம்சத்து சான்றோர்சூழ் நற்சபைமுன்
வந்தென்ன செய்கின்றாய் வம்பு?!

#சகுந்தலா_3
என்னய்யா.....‌ சொல்கின்றீர்?!!! என்னையா சொல்கின்றீர்?!!!
என்னையே தந்ததற்கா ஈது?!

#துஷ்யந்தன்_4
உளராதே பெண்ணே...உயர்சபையின் முன்னே
களவாண்ட கள்வன்யார் காட்டு?!

#சகுந்தலா_5
கொட்டிய தேளின் கொடுக்கறியும்
கொட்டியதை
கட்டியநீர் விட்டதேன் கை

#துஷ்யந்தன்_6
என்னம்மா சொல்கின்றாய் ஏதும் புரியவில்லை
சொன்னசொல் ஆய்ந்தாயா சொல்?

#சகுந்தலா_7
வயிற்றில் வளர்கின்ற மைந்தனே சாட்சி
உயிர்கொடுத்தோன் நீரே உணர்!

#துஷ்யந்தன்_8
யாருடைய பிள்ளைக்கு யாரம்மா தந்தையார்?!
ஊருவிட்டு ஊர்போ உடன்

#சகுந்தலா_9
கந்தர்வ கல்யாணம் கட்டியது உண்மையெனில்
வந்தென்னைப் பார்ப்பாய் விரைந்து

#துஷ்யந்தன்_10 (திரும்பி வந்தபின்)
துர்வாச சாபத்தால் தூரமாய்ப் போனதற்கு
கர்மவினை மூடியதென் கண்!

#சகுந்தலா_துஷ்யந்தன்_11
காரணம் என்றெல்லாம் கண்டுண்மை சொன்னாலும்
பேரணம் அஃதென் பிழை

#துஷ்யந்தன்_12
பரதனைத் தந்தெந்தன் பாரம் குறைத்தாய்
பரதன்பேர் நாடாகும் பார்

✍️செ. இராசா

No comments: