05/06/2022

கல்வி படும்பாடு ------------ கொள்ளை

 


தொடக்கப் பள்ளியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தமிழ்நாட்டின் தலைசிறந்த ஒரு கல்லூரியில் தற்சமயம் B.Ed. படித்து வருகிறார். அந்தக் கல்லூரியில் காலம் காலமாக நடக்கும் ஒரு கொள்ளை சம்பவம்பற்றி நண்பர் பகிர்ந்து கொண்டார். அதாவது இரண்டு வருடப்படிப்பான B.Edன் செய்முறை அறிக்கைகள் சம்பந்தமான தாள்கள் ஒவ்வொன்றிற்கும் 10,000 ரூபாய் கேட்கின்றார்களாம். நண்பரோ இதுவரையிலும் எந்த லஞ்சமும் கொடுக்காதவர், அவர் முடியாதென்று மறுக்கவே, உடன் பயிலும் மாணவர்களே ஏன் வம்பென்று பேசுகிறார்களாம். நீங்கள் பணம் கேட்டால் நான் இதை வெளிப்படையாக ஆதாரங்களுடன் பகிர்வேன் என்று கூறவே, அவர்கள் இப்போது அடக்கி வாசிக்கின்றார்களாம். தமிழ்நாட்டின் வள்ளல் பரம்பரையைச் சேர்ந்தவரின் கல்லூரியிலேயே இந்நிலையென்றால், மற்ற கல்லூரிகள் எப்படியோ?!
 
எனக்கும் இதேபோல் ஒரு சம்பவம், சிறுவயதில் 9ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பிற்குப் போக முற்பட்டபோது ஏற்பட்டது. பொதுவாக எந்தப் பள்ளியிலுமே, 10ஆம் வகுப்பில் சேர்க்க மாட்டார்கள்தான். பத்தாம் வகுப்பு ரிசல்ட் கெட்டுவிட்டால், அவர்களின் வியாபாரம் படுத்துவிடுமென்பதுதான் காரணம். நான் ஒன்பதாம் வகுப்பில் சிவகங்கை மாவட்டம் ஆத்திக்காடு தெக்கூரில் விடுதியில் தங்கி படித்துவந்தது பிடிக்காமல், அடம்பிடித்து சிவகங்கை பள்ளியில் சேர வந்தபோது, அங்கே ஒரு பள்ளியில் 5000 ரூபாயும், ஒரு பள்ளியில் 2000 ரூபாயும் கேட்டார்கள். என் அப்பாவோ ஒரே ஒரு பெஞ்சு மட்டும் போடச்சொன்ன, அரசுப் பள்ளியொன்றில் சேர்த்துவிட்டார்கள். அந்தப் பள்ளியில் அதுவரையிலும் 400 க்குமேல் யாருமே எடுத்ததில்லை. அந்தப் பள்ளியில் என் நேரம் மேலூரில் இருந்து வந்த நல்லமுத்து என்னும் தலைமையாசிரியரால் நான் 432 எடுத்து முதல் மாணவனாக தேர்வானேன். அதுமட்டுமல்லாமல், யார் யாரெல்லாம் 9 ஆம் வகுப்பில் இருந்து தானாகவோ அல்லது விரட்டிவிடப்பட்டு வந்தார்களோ அவர்கள் அனைவரையும் தன் பள்ளியில் சேர்த்துக்கொண்டு பத்தாம் வகுப்பில் முழுத் தேர்வாக்கிக்க காட்டினார். அவர் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? படிக்கும் மாணவனைப் படிக்க வைப்பதல்ல பள்ளிக்கூடம். படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதே பள்ளிக்கூடம். அந்த மாதிரி ஆசிரியரை இனிமேலும் பார்க்க முடியுமா? எப்படி முடியும்?! இப்போதெல்லாம் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எழுதாத சட்டமாகிவிட்டதே, இதில் ஆசிரியர்களை உருவாக்கும் B.Edமட்டும் விதிவிலக்கா என்ன?!
✍️செ. இராசா

No comments: