22/12/2021

அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்

 



அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்தான் முன்பெல்லாம் அனைவரும் நடைப்பயிற்சி செய்வார்கள். வள்ளல் அழகப்பச்செட்டியாரின் மனம் போலவே மிகப்பெரிய மைதானம் அது. கொரானாவின் தாக்கத்தால் அந்த மைதானத்தில் பொதுமக்கள் செல்லும் வழி தற்சமயம் அடைக்கப்பட்டுள்ளது. நான் எப்போது காரைக்குடி வந்தாலும் அதிகாலை நண்பருடன் சென்று விடுவது வழக்கம். அவ்வளவு பெரிய மைதானம் பூட்டப்பட்டுள்ளதால் தொலைதூரக்கல்விக்கான மைதானத்தில்தான் நடந்து வருகிறோம். சரி அதற்கென்ன இப்போ?! அதானே... இதோ வருகிறேன்.
 
பாகற்காய்ச் சாறு, வாழைத்தண்டுச் சாறு, நெல்லிக்காய்ச்சாறு, இஞ்சிச்சாறு, காய்கறிச்சாறு மற்றும் முளைகட்டிய பயறு வகைகள் என்று வெறும் 10 ரூபாய்க்கு ஒரு ஐயா அங்கே விற்கின்றார். அனைவருமே வாங்கிப் பயனடைகிறார்கள். உண்மையில் இவையெல்லாம் வெறும் வியாபாரம் என்று கடந்துவிடமுடியாது. கண்டிப்பாக தற்போதையச் சூழலில் இவற்றைச் சேவையாய்த்தான் பார்க்கின்றேன். காரணம் யாரைப் பார்த்தாலும் உடல் உபாதைகள். பெரும்பாலும் யாரிடமும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய விடயமே. இலவசமாக ஆங்காங்கே உடல் ம்ற்றும் மனவளக்கலைக் கூடங்கள் இருந்தாலும் பாவம் போவோருக்குத்தான் நேரமில்லை. பிறகென்ன?! மருத்துவரிடம் செலவளிக்க வேண்டியதுதான் பணத்தையும் நேரத்தையும்...
 
மேலும் கொசுறாக ஒரு செய்தி:
பனி அதிகமாகப் பொழிகிறதென்று ஒருவர் தலைக்கவசம் போட்டு நடப்பதைக்கண்டு நாங்கள் வாய்விட்டுச் சிரித்தோம். அவருக்கேத் தெரியாமல் ஒளிப்படமும் எடுத்துவிட்டோம். காரணம் பனியிலும் நடக்கும் அவருடைய ஈடுபாடு..... 😀😀
😀
✍️செ. இராசா

No comments: