07/04/2021

அனுபவப் பதிவு 17-----முதல் வேலை சொந்த ஊரில்-----கட்டுரை


 
#மேஸ்திரி_பொறியாளரானார்
#மதகுபட்டி_நூலகத்தில்_ஆங்கில_நாளிதழ்

2001 மே மாதம், பொறியியலுக்கான கடைசித்தேர்வு முடிந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து என் TVS-சுஸுகி வாகனத்திலேயே சிவகங்கை வந்தடைந்தேன் (சுமார் 300 கிமீ தூரம்). வந்த பத்து நாட்களிலேயே சாமி என்கிற பொறியாளரிடம் என் தந்தையார் சேர்த்துவிட்டார்கள். முதல் பணியே என் சொந்த ஊரான அம்மன்பட்டியில் திரு. மனோகரன் மாமாவின் களத்தில்தான். ஆம், நெல்லடிக்க ஒரு களம் அமைக்க வேண்டும், அக்களத்திற்கு ஒரு பாலம் மற்றும் இரண்டு பெரிய கேட்(Gate) போட வேண்டும். களம் அமைப்பதற்காக நூல் கட்டி அளக்க என்னையும் மேஸ்திரியையும் பணித்தார்கள். இரண்டு பக்கமும் நூல் கட்டி மூளைமட்டம் பார்க்கும்போது , 3-4-5 என்று அளவீடு வைத்து சரிபார்க்கச் சொன்னார்கள். எனக்கு பத்தாம் வகுப்பின் போது நல்லமுத்து வாத்தியார் சொல்லித்தந்த வாய்ப்பாடுதான் ஞாபகம் வந்தது (3-4-5, 5-12-13, 7-24-25, 8-15-17, 9-40-41..) அதாவது செங்கோண முக்கோணத்தில் இரண்டு பக்க அளவுகளைக் குறித்துக்கொண்டால் மூன்றாம் பக்கம் என்னவென்று பிதோகோரஸ் தேற்றத்தில் கணக்கீடு செய்வதை சுருக்கமாக சில விடைகளை ஞாபகம் வைப்பதற்கான குறிப்பு அது.

இப்படி நாம் எங்கோ படித்ததைக் களத்தில் பயன்படுத்திய போது மிகவும் புதுமையாக இருந்தது. ஆனால் அளவீடுகள் தான் மிகவும் இடித்தது. காரணம் பொறியியல் படிக்கும் போது அளவீடுகள் எல்லாம் SI-யூனிட் அதாவது மீட்டர், சென்டிமீட்டரில் இருக்கும். களத்திலோ அடி, இன்ச் என்று இருக்கும். இப்படி படிப்புக்கும் நடப்பிற்கும் உள்ள ஓட்டைகள் ஏராளமாக இருந்தது. இப்படியே அடி இன்ச் வைத்து வரைபடம் வரையவும் களத்தில் பணியாற்றவும் என்னைப் பழக்கிக்கொண்டேன். அதேபோல் கட்டுமானப் பொருட்களின் பெயரும் பயன்படுத்தும் கருவிகளின் பெயரும் ஊருக்கு ஊர் சிறிய அளவிலான மாறுதலோடு இருக்கும். அதையும் கற்றுக்கொண்டேன்.

அம்மன் பட்டி, மதகுபட்டி, அரளிக்கோட்டை, திருப்பத்தூர், சுண்ணாம்பிருப்பு என்று பல ஊர்களில் நான் வரைந்த வரைபடத்தில் கட்டிடங்கள் உருவானது மிகவும் மனமகிழ்ச்சி தந்தது. அங்கே எங்க ஊரில் வேலை பார்க்கும்போது நிறைய புதிய அனுபவங்களும் கிடைத்தது. சம்பளம் போடும்போது கையில் கொடுக்காமல் ஒரு உறையில் போட்டுத்தான் கொடுப்பேன். அதை எங்க ஊர் அக்காக்கள் அம்மாக்கள் இன்னும் சொல்வார்கள். அங்கே வேலை பார்க்கும்போது ஏரியூரைச்சேர்ந்த தேவா என்ற ஒரு மேஸ்திரி அறிமுகம். சின்ன வயதுதான். 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப சூழ்நிலையால் மேஸ்திரியாக வேலை பார்த்தான். அவனை என் தந்தையாரின் மூலம் மானாமதுரை பாலி டெக்னிக்கில் என் தம்பியோடு சேர்ந்து இலவசமாகவே சீட்டு கிடைக்கும் அளவில் செய்து கொடுத்தேன். அவன் அதற்கு மேலும் படித்து பொறியாளராக பல நாடுகளில் சாதிக்கிறான் என்பதை எண்ணும்போது அதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த அந்த இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்வேன்.

சரி மீண்டும் வேலை பற்றி பார்ப்போம். அங்கே, நான் மினி ட்ராப்ட்டர் என்ற கருவி கொண்டுதான் வரைபடம் வரைவேன். பெரும்பாலும் என் வரைபட வடிவத்தையே பொறியாளர் ஒத்துக்கொள்வார். பொறியாளர் சாமி சிங்கப்பூரில் இருந்து புதிதாகத் தொழில் தொடங்கியவர் என்பதால் புதியவனான என் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டார் என்றே நினைக்கிறேன். எவரெஸ்ட் பில்டர்ஸ் என்ற பெயரில் ஒரு அலுவலகம் போட்டார். எனக்கு 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தார். கட்டிடங்களில் இரும்புக்கம்பிகள் எல்லாம் அனுபவத்தை மையமாக வைத்தே போடுவார்கள், நான் கட்டுமானவியல் (Structural) என்பதால் கணக்கீடு செய்து சரிபார்ப்பேன்.எல்லாம் சரியாகவே வரும். ஆக, பொறியாளராக இருந்து நாம் இங்கே செய்வதை, யார் வேண்டுமானாலும் செய்கையில் நாம் எதற்க்காக இங்கே குப்பை கொட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால் எப்படியாவது சென்னை கிளம்பவேண்டுமென்று வேலை தேட ஆரம்பித்தேன். ஹிந்து பத்திரிக்கை போன்ற ஆங்கில நாளிதழ்களில்தான் நல்ல வேலை வாய்ப்பு வரும் என்பதால் அதைத்தேடி 17 கிமீ தாண்டி சிவகங்கை போவேன். அதுவும் முன்பே சொல்லி வைக்க வேண்டும். இல்லையெனில் கிடைக்காது. கிடைக்காத நாள்களில் சிவகங்கையில் உள்ள தலைமை நூலத்தில் போய் பார்ப்பேன். மதகுபட்டி நூலகத்திற்கு இந்தப் பத்திரிக்கை போடுவீர்களா என்று அணுகினால், அதற்கு ஆயிரம் ரூபாய் தரும் புரவலர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றார்கள். எங்க ஊர் கண்ணன் சித்தப்பாவிடம் பேசி அவரைப் புரவலராக்கி மதகுபட்டி நூலகத்திற்கு ஆங்கில நாளிதழைக்கொண்டு வந்தேன். காரணம், யாம் பெற்ற இன்னல் யாரும் படக்கூடாது என்பதே..

எப்படியோ...சென்னையிலிருந்து வந்தது என் புதிய வேலைக்கான ஓலை...

No comments: