19/04/2021

நிலையாமை ------வள்ளுவர் திங்கள் 156



கடந்ததை எண்ணிக் கலங்கிட வேண்டாம்
நடப்பதை ஏற்று நட
(1)

இருந்தோன் இறந்தான் இருப்போன் இறப்பான்
இருக்கையில் வாழ்வாய் இனிது
(2)

உடலை எரித்தால் ஒருபிடிச் சாம்பல்
உடலாசை வேண்டாம் உதறு
(3)

நெற்றியில் வைக்கிற நீறினைப் போலவே
பற்றினால் எல்லாம் பொடி
(4)

தந்திடத் தந்திடத் தந்தது வந்திடும்
வந்திட வந்திடத் தா
(5)

இரையை நினைந்தே இறையை மறந்தால்
கரையேற்ற யாருளர் சொல்?
(6)

தாயென்ன தாரமென்ன தன்னுயிர் போனபின்னே
வாயென்ன சொல்லும் பிணம்
(7)

இந்நேரம் இந்நொடி இஃதென்றே வாழாதோர்
எந்நேரம் வாழ்வாரோ இங்கு?!
(8)

விலைமகள் நாய்செத்தால் வந்திடும் கூட்டம்
விலைமகளுக் கில்லை உணர்
(9)

காற்று கழன்றுவிட்டால் காட்சியெல்லாம் மாறியிங்கு
தோற்றப் பிழையாகும் பார்
(10)

No comments: