07/11/2020

சொம்பு



"என்ன சொம்பு அடி வாங்கி இருக்கே" என்றால்
அங்கே சொம்பு அடிக்க உதவும் பொருள்   

"நல்லா சொம்பு தூக்கியா இருப்பான்போல" என்றால்
அங்கே சொம்பு காக்கா பிடிக்க உதவும் பொருள்  

"நாட்டாமை.....சொம்பில்லாம தீர்ப்பா?" என்றால்
அங்கே சொம்பு அடையாளமாய் நிற்கும் பொருள்.
.
இன்று
சொம்பில் நீராகாரம் குடித்த
பழைய தலைமுறை இல்லாமல் போகலாம்
ஆனால்,
சொம்பில் நீரே ஆகாரமாய் அருந்தும்
புதிய தலைமுறை இல்லாமல் இல்லை

முதலிரவில் தூக்கிய பால் சொம்பு முதல்
முடிந்த பின் தூக்கும் நீர் சொம்பு வரை
இந்த சொம்பின் பயன்பாடுகள்
ஒன்றா இரண்டா?!
சொல்லி மாளாது...

காவேரி அடைபட்ட  
கமண்டலம் என்பது என்ன?!
அகத்திய முனிவரின் சொம்புதானே?!

தேங்காய் மாவிலை வைத்த
கலசம் என்பது என்ன?!
அதுவும் உண்மையில் சொம்புதானே?!

இந்த சொம்பில்
பால் வைத்துத் தூக்கினால்
பால்க்குடம் என்பர்

நீர் வைத்து பூஜித்தால்
தீர்த்தக்குடம் என்பர்
அவ்வளவுதானே?!

எனில்...
சொம்பின் மகத்துவம் சொம்பாலா? இல்லை
சொம்பிற்குள் உள்ள பொருளாலா?

ஆனால் ...
கால் கழுவும் சொம்பு
கழிப்பறை தாண்டவில்லையே...

எனில்
சொம்பின் மகத்துவம் பயன்பாட்டாலா?

ஆம்...
நீயும் நானும் ஒன்றே
பிறப்பாலே சிறு சொம்பே...
கலசமாவதும்
கமண்டலமாவதும்
அவரவர் செய்கையாலே...

ஆமாம்...
கால் கழுவும் செய்கை
மகத்துவமில்லையென்று
யார் சொன்னார்கள்?!!
எனில் சொல்..
நீயும் நானும் ஒன்றே
செய்கையாலும் சிறு சொம்பே...

✍️செ. இராசா

No comments: