21/11/2020




#மான்
மான் என்று சொன்னதுமே
மனக்கண்முன் பாய்வது
மான் மட்டுமா என்ன?!
அம்மானில் மோகம் கொண்ட
பெம்மான்களும் தானே..?!!

ஆம்....
மேயாத மானைத் தேடிய
முருகப் பெருமான் முதல்
மேய்ந்த மானைத் தேடிய
சல்மான் கான் வரை
எம்மானாய் இருந்தாலும்
மான் என்றால் மோகம் தானோ ?!

ஆமாம்...
மாய மானாய் மாறி
மாயமானானே மாரீசன்...
அவனேன் அன்று
ஏதோவோர் விலங்காய் மாறாமல்
எதற்காகப் புள்ளிமானாய் மாறினான்..?!!

அஃதே. ...
கலவிய மான்களைக் கொன்று
கலவிசாபம் பெற்றானே பாண்டு
அவனேன் அன்று
ஏதோவோர் விலங்கைக் கொல்லாமல்
எதற்காகக் கூடியமானைக் கொன்றான்?

மயிர் நீப்பின் வாழா கவரிமான்போல்
உயிர் நீப்பர் என்கிறாரே வள்ளுவர்
அந்த சாதுவான மான்
அப்படிச் சாகுமா என்ன?!!

உண்மையில்..
மானுக்கும் மானுடனுக்கும் என்ன சம்பந்தம்?
தொல் பொருள் ஆய்வில் எல்லாம்
தோண்ட தோண்ட வருகிறதே
அந்த மான்சின்னம்
ஒருவேளை....
மானிடன் அதிகமாய் வாழ்ந்தது
மானுடன் தானா? எனில்
மானிடம் மாறியதெங்கே?
மானிடன் மாறியதாலா?!
எல்லாம்...
அந்த மானுக்கே வெளிச்சம்...!!!


✍️செ. இராசமாணிக்கம்

No comments: