15/11/2020

பசி



பசி இல்லா உலகம் சாத்தியமா?!!

சாத்தியமெனில்.....
நெஞ்சும் இடுப்பும்
ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும்
வயிறும் ஆசன வாயும்
அவசியமின்றிப் போயிருக்கும் ..

எருவாய்க்கும் வேலையில்லை
திருவாய்க்கும் வேலையில்லை
திருவாய்க்கு வேலை இல்லையேல்
வருவாய்க்கும் தேவை இல்லை
ஒருவாய் உணவிற்காய்த்- தெருத்
தெருவாய்த்திரியும் நிலையும் இல்லை

ஆனால்...
பசி இல்லா உலகம் சாத்தியமில்லையே...

பசித்திரு என்று சொன்ன வள்ளலாரின் பசியும்
பசித்திருந்து அழுகின்ற வறியோரின் பசியும் பசிதான்
ஆனால் ஒன்றல்லவே.
முன்னது ஆன்மீகப் பசி
பின்னது அத்தியாவசியப் பசி...
பிந்தையப் பசி வந்தால்
முந்தையப் பசிக்கிங்கே இடமுண்டா என்ன ?

வயிற்றில் வருகின்ற பசியும்
வயிற்றிற்குக்கீழ் வருகின்ற பசியும் பசிதான்
ஆனால் ஒன்றல்லவே.
முன்னது உணவால் வரும் பசி
பின்னது உணர்வால் வரும் பசி
முந்தையப் பசி வந்தால்
பிந்தையப் பசிக்கிங்கே இடமுண்டா என்ன?

இங்கே...
வயிற்றில் வருகின்ற பசி
வலிய பசிதான்
ஆனால்;
வறுமையில் வருகின்ற பசி?!!
அய்யகோ....
வலியிலும் வழி இல்லாப் பசி

இறைவா போதும்
இரை தா...நீயும்..

✍️செ. இராசமாணிக்கம்

தலைப்பு:
Mohanan
தம்பி


No comments: