24/11/2020

செருப்பு



செருப்பு பிஞ்சிடும் என்று
செருக்கோடு சொல்வோரை
எப்படிச் சொல்லலாமென
எகிறிக் குதிப்பவரா நீங்கள்...
சற்று பொறுங்கள்...
செருப்பென்றால் இழிவா என்ன ?

ஒன்றா இரண்டா
பதினான்கு வருடங்கள்..
அயோத்தியை அலங்கரித்ததே
அந்த சீதாராமனின் செருப்புதானே...?!!

அட
இன்றைக்கும் கூட
இலங்கை ஜெயராஜ் ஐயா வீட்டின்
பூஜையறையை அலங்கரிப்பதே
குரு இராதாகிருஷ்ணனின் செருப்புதானே...?!

செருப்பு....

கல்லும் முள்ளும் குத்தியபோதும்
கத்திரி வெய்யில் கொளுத்தியபோதும்
கற்கால மனிதன் கண்டறிந்த
கால்களின் கவசமே செருப்பு

மரமாய்..
மாட்டுத்தோலாய்
நெகிழியாய்..
இரப்பராய்...
இப்படி எப்படி எப்படியோ மாறினாலும்
இன்னும் குணம் மாறாக் குன்றாய்
என்றும் தாங்கும் நண்பனாய்
கீழிருந்து தாங்குவதே செருப்பு

குளியலறைக்கு ஒன்றும்
படுக்கையறைக்கு ஒன்றுமாய்
காலணிகள் பல கொண்டோர்
கண்டிருக்க வாய்ப்பில்லைதான்
.
போத்தலைப் பொத்தல்போட்டும்
சாக்கினைச் சுற்றிக்கொண்டும்
எப்படியோ சமாளிக்கும்
ஏழையர்க்கேப் புரியும்...
செருப்பு..வெறும் செருப்பல்ல- அது
கொப்பளிக்கும் கால்களுக்கு ஏசி என்று...

அவசர நேரத்தில்
அறுந்து போயிருந்தாலோ
தேவையான இடத்தில்
தொலைந்து போயிருந்தாலோ தெரியும்
செருப்பு..வெறும் செருப்பல்ல- அது
தத்தளிக்கும் கால்களுக்கு நாசி என்று...

இனியும்....
செருப்பு பிஞ்சிடும் என்று
செருப்பை இழிவு படுத்தாதீர்....

இப்படிக்கு,

செருப்பாய்....
செ. இராசமாணிக்கம்

No comments: