10/10/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-9, வகர வருக்கம்

#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_9
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#வகர_வருக்கம்

#வல்லமை_பேசேல்_1
வல்லமை யாதென்று வாயிலே பேசாமல்
வல்லமைத் தன்மையுடன் வாழ்

#வாதுமுற்_கூறேல்_2
வாதத்தை முன்வைத்து வார்த்தைகளால் சண்டையிடும்
வாதப்போர் வேண்டாம் விடு

#வித்தை_விரும்பு_3
அனைத்துக் கலைகளையும் ஆர்வமுடன் கற்கும்
நினைப்பை மனதில் நிறுத்து

#வீடு_பெறநில்_4
வாழ்க்கையின் நோக்கமே மோட்சமென நன்குணர்ந்து
வாழ்கின்ற நன்நெறியில் வாழ்

#வு #உத்தமனாய்_இரு_5
சத்தியமும் நேர்மையும் சற்றும் குறையாத
உத்தமனாய் வாழ்ந்தால் உயர்வு

#வூ #ஊருடன்_கூடிவாழ்_6
ஊருடன் கூடியே ஒற்றுமையாய் வாழ்வோர்க்கு
பேருடன் கிட்டும் பலன்

#வெட்டெனப்_பேசேல்_7
வெட்டொன்று துண்டொன்றாய் வேகமாய்ப் பேசினால்
பட்டென்று போகும் உறவு

#வேண்டி_வினை_செயேல்_8
வினையின் பலனையே வேண்டாமல் என்றும்
வினையின் செயலை விரும்பு

#வைகறைத்_துயிலெழு_9
பிரம்ம முகூர்த்தத்தின் பின்னர் எழாமல்
பரிதி வருமுன் எழு

#வொ #ஒன்னாரைத்_தேறேல்_10
எதிரியின் சூளுரையை என்றைக்கும் நம்பி
எதிர்வினை ஆற்றல் விடு

#வோ #ஓரஞ்சொல்லேல்_12
ஒருபக்கச் சார்பாய் உரைத்திட வேண்டாம்
இருபக்கமும் பார்த்தே இயம்பு

✍️செ.இராசா

(நாளை ஒரே ஒரு குறளோடு முடிவடைகிறது)

No comments: