08/10/2020

குறளுரையாடல்-12, கரு நிலையாமை

 

#குறளுரையாடல்_12



#தொடர்_உரையாடல்
#கரு_நிலையாமை
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்

#ஐயா_1
பிரம்மன் உளியால் பிறக்கும் சிலைகள்
வரம்பற்றக் கால வரவு.

#நான்_2
வரவைக் கொடுத்து வளத்தைப் பெருக்கி
இருப்பைக் கழிப்பான் இறை

#ஐயா_3
இறையொன்றே என்றும் நிலைபொருளாம் எண்ணம்
இறையாத வுள்ள இயல்பு.

#நான்_4
இயல்பு விதிப்படியே இவ்வுலக வாழ்வும்
பயமின்றி வாழப் பழகு

#ஐயா_5
பழகும் பயிற்சி பழக்கமானால் உள்ளம்
அழகாய் நிறையும் அறி.

#நான்_6
அறியாத ஒன்றை அறிந்ததாய் எண்ணி
அறியாமல் மாயும் அகம்

#ஐயா_7
அகத்தின் உணர்ச்சி அழகாய் இருந்தால்
முகத்தில் நெருங்குமா மூப்பு

#நான்_8
மூப்பும் பிணியும் முடிவில் மரணமும்
தீர்ப்பென எண்ணி நட

#ஐயா_9
நடக்கும் நொடியில் நழுவும் அடியில்
கடக்கும் புவிவழி காண்.

#நான்_10
காண்கின்ற அத்தனையும் காணாமல் போனாலும்
வான்முட்டும் ஆசையில் வாழ்வு

#ஐயா_11
வாழ்வென்றால் எண்ணங்கள் வான்முகிற்போல் எங்கெங்கும்
தாழ்வின்றி மேல்விரியும் தான்

#நான்_12
தான்தான் உயர்வென்று தன்னையே போற்றுபவர்
கோன்தன் உறவென்பார் பார்

#ஐயா_13
பாரெல்லாம் பார்த்தாலே பார்வையால் பார்க்கலாம்
யாரெல்லாம் யார்யாராய் யார்

#நான்_14
யார்யாரோ வந்தாலும் யார்யாரோ சென்றாலும்
பார்போற்ற நிற்போரைப் பார்

#ஐயா_15
பார்க்கும் உலகே படிப்போர்க்குப் பாரெனில்
ஆர்க்கும் உலகப்பேர் யாது?

#நான்_16
யாதும் நமதூராய் யாவருக்கும் சொன்னாலும்
ஏதும் புரியலையோ இங்கு?

#ஐயா_17
இங்(கு)எனச் சொல்கின்ற இன்சொல் உறைவிடமா
உங்கள் மனமா உரை

#நான்_18
உரைக்கும் கவிதை உணர்த்தும் எழிழாய்
நரையும் அழகென நம்பு

#ஐயா_19
நம்பிக்கை யுங்கையாம் நம்புவோர்க்(கு) ஐங்கரன்போல்
தும்பிக்கை யுங்கை உணர்.

#நான்_20
உணர்வால் உணரும் உயிரின் நிலையை
உணர்வோர் பெருவார் உயர்வு

✍️ஐயாவுடன் நான்

No comments: