02/03/2023

குறளுரையாடல் அந்தாதி ---- கரு: தேர்தல் கூத்துகள்

 


ஒற்றைப்படை_செ_இராசா 

இரட்டைப்படை_சுந்தரராஜன்_தயாளன்

உருட்டும் முறையில் உருட்டியதால் மீண்டும்
உருட்டிட வேண்டாம் உருட்டு
(1)

உருட்டும் புரட்டும் உடையாரே இந்தத்
திருடர்கள் தீரா விடர்
(2)

விடமென்ற சொல்லே விளக்கிடும் தீரா
விடமென்றால் யாரிங்கு வேறு?
(3)

வேறுயாராம்? வெட்டியாய்ப் பேசி முரசொலித்தார்
கூறவரின் பேரைநீர் கூறு
(4)

கூறுவதைக் கூறிவிட்டு கூறிடவே இல்லையெனும்
கூறுகெட்ட கூட்டமெல்லாம் கூட்டு
(5)

கூட்டிடும் கூட்டமெல்லாம் கூட்டாகா; கூட்டாமல்
கூட்டுவோர் தான்வெற்று வேட்டு
(6)

வேட்டுவன்போல் எல்லோரும் வேட்டை நடத்தித்தான்
நாட்டில் பிழைக்கின்றார் நன்கு
(7)

நன்கவர் வாழத்தான் நம்மையவர் ஏய்கின்றார்
என்னபேர் வைப்போம் இவர்க்கு?
(8)

இவர்க்கென்ன நாமிங்கே இன்னோர்பேர் வைக்க
சவத்திலும் நோண்டும் சனம்
(9)

சனமெல்லாம் சிந்தித்தே மாசனமாய் சேர்ந்தால்
பிணமாம்;இவ் வீணர் பிழைப்பு
(10)

பிழைப்புக்காய் பின்னர் பிடுங்கிட வேண்டி
இழைக்கின்ற கூத்தே இது
(11)

இதெல்லாமா ஓர்பிழைப்(பு)! இப்படியா வெல்வார்?
இதன்பேரா தேர்தல்?... இழிவு!
(12)

இழிவுதரும் என்றெல்லாம் எண்ணாமல் தானே
கழிவிலும் தேடுகிறார் காசு
(13)

,காசினைத் தேடும் கழிவாம் இவர்களைப்
பேசுவதால் என்ன பயன்?
(14)

பயன்கருதிச் செய்கின்ற பாவிகளைப் பற்றி
தயவின்றி கூறுவதா தப்பு?!
(15)

தப்பில்லை தம்பிநீர் தாராளம் செப்புக
எப்போதும் பார்த்தவரைத் துப்பு
(16)

துப்பில்லா மாந்தரை துப்பிடலாம் தப்பில்லை
துப்பாமல் தப்பவிடல் தப்பு
(17)

தப்பாமல் துப்புக தப்புசெய் மாந்தரை
எப்போதும் திண்மை உயர்வு
(18)

உயர்வான நோக்கில் ஒழுகுவதாய்ச் சொல்லி
உயர்த்திடுவார் தன்னை உணர்
(19)

உணர்க தமிழாநீர் உண்மை நிலையை
உணர்க;இம் மாந்தர் உருட்டு‌
(20)

✍️ இருவரும் இணைந்து வழங்கியது

No comments: