28/03/2023

தொலைநோக்கு




கண்கள் இரண்டென்றாலும்
காட்சி ஒன்றுதான் என்போரே...
உண்மையைச் சொல்லுங்கள்...
அத்தனை ஜோடி கண்களுக்கும்
அதே காட்சிதான் தெரிகிறதா?!

துரியோதனன் பார்வையில்
அருவருப்பாய்த் தெரிவது
தருமனின் பார்வையில்
அழகாய்த் தெரிகிறதே...‌!!!

நாத்திகர் பார்வையில்
கல்லாய்த் தெரிவது
ஆத்திகர் பார்வையில்
கடவுளாய்த் தெரிகிறதே....!!!

எனில்...
காட்சியென்பது
வெறும் கண்களில் இல்லைதானே...!!
ஆம்...
நண்பன் தருவது
நஞ்சென்றே கண்டாலும்
கண்ணோட்டம் இருந்தால்
உண்ணலாம் என்கிறாரே வள்ளுவர்...
எனில்...
நோக்கும் நோக்கில்தான் எத்தனை
நோக்குள்ளது பாருங்கள்....

அண்ணலும் நோக்கி
அவளும் நோக்கினால்
அங்கே காதல் உடன்படிக்கை
கையெழுத்தாகிறது‌!

அப்படி நோக்குவதை
அவள் அப்பாவும் நோக்கினால்
அதே உடன்படிக்கை
கைகலப்பாகிறது!

அனைவரும் கிளியை நோக்கையில்
அர்ச்சுனன் கண்களை நோக்கினானே
அது தொலைநோக்கு..

அனைவரும் ஈரோப்பை நோக்கையில்
ஹிட்லர் ரஸ்யாவை நோக்கினானே
அது தொலை நோக்கல்ல
அவனுக்கான தொல்லை நோக்கு.....

இங்கே...
ஒவ்வொரு நோக்கும்
அவரவர் கோணத்திலும் மாறும்....
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!!

மறைந்திருந்து தாக்கிய
வாலி வதைபோல்
சதி செய்து தாக்கிய
கர்ண வதைபோல்
இங்கே தவறும் சரியாகும்
இலக்கு சரியென்றால்...!!!

இனியும் ஒன்று தவறென்றால்
கொஞ்சம் இடம்மாற்றிப் பாருங்கள்!
தெரியாததும் தெரியும்!

✍️செ. இராசா

No comments: