03/02/2020

இறைநாடு (குறளின் குரல்)


எழுசீர் விருத்தம்
***********************
எதையும் பற்றும் எண்ணம் இன்றி
........ஈரம் உள்ள நாடு!
சிதைக்கும் கெட்டச் சிந்தை இன்றித்
........தீரம் கொண்ட நாடு
புதைக்கும் அற்பப் போட்டி இன்றிப்
.......போர்கள் செய்யா நாடு!
வதைக்கும் இன்னல் வாழ்க்கை இன்றி
......வாழும் நல்லோர் நாடு!

அகதிகள் நம்மை அண்டும் போதில்
......அன்பாய் ஏற்கும் நாடு!
சகதிகள் அள்ளிச் சாற்றும் போதும்
......சண்டை செய்யா நாடு!
சகுனிகள் வேலை செய்யும் போதில்
.....சாட்டை தூக்கும் நாடு!
தகுதிகள் இன்றித் தாக்கும் போதோ
.....தீயாய்ப் பாயும் நாடு!

வருவோர் இன்னும் வந்தார் என்றால்
....வசதியாய் வாழும் நாடு!
வருவோர் போதும் வேண்டாம் என்றால்
......வறுமையாய் வாழும் நாடு!
இருப்போர் வாழ்வில் இன்னல் என்றால்
......இரப்பவர் வாழும் நாடு!
இருப்போர் எல்லாம் இன்பம் என்றால்
......இறைவனே வாழும் நாடு!

செ. இராசா
****************************************************
குறள் எண்: 733

"பொருட்பால் - அரணியல்"

குறள்:

"பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு."

சாலமன் பாப்பையா உரை:
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

No comments: