04/02/2020

கவிதை என்பது?



கவிதை என்பது
காமம்போல்...
இயல்பின் ஊற்றில்
இன்பம் பிறப்பதால்

கவிதை என்பது
பக்திபோல்...
அகத்தின் கிளர்ச்சியில்
ஆனந்தம் வருவதால்

கவிதை என்பது
தியானம்போல்...
ஒன்றி இருக்கையில்
தன்னை மறப்பதால்

கவிதை என்பது
காதலிபோல்..
இருக்கையில் ஊடி
பிரிகையில் உணர்வதால்

கவிதை என்பது
நண்பனைப்போல்...
இன்னல் வருகையில்
கண்ணீர் துடைப்பதால்

கவிதை என்பது
அன்னையைப் போல்..
அஃறிணைப் பொருளையும்
அன்பால் அணைப்பதால்

கவிதை என்பது
தந்தையைப்போல்
தவறு செய்கையில்
தட்டிக் கேட்பதால்

கவிதை என்பது
மனைவியைப் போல்
என்ன விந்தையென
இன்னும் கேட்பதால்

கவிதை என்பது
குழந்தையைப் போல்
தத்தம் கவிகளே
அதிகம் இனிப்பதால்

கவிதை என்பது
அரசனைப் போல்
வருமானம் இல்லாதும்
வரிகள் கேட்பதால்...

கவிதை என்பது
கவிதையைப்போல்
கவியின் கருவே
கவியாய்ப் பிறப்பதால்...

✍️செ. இராசா

PC: Karthik Sethupathy தம்பி நன்றி நன்றி

(இங்கே உள்ள புகைப்படம் கத்தாரில் வில்லாஜியா என்ற பல்பொருள் அங்காடிகள் வளாகத்தில் எடுக்கப்பட்டது. தாங்கள் காண்கின்ற மேகம் மற்றும் ஆறு எல்லாம் செயற்கையானது)

No comments: