08/10/2017

ஆன்மீகம்



ஆன்மீகப் பாதையிலே
அடியெடுத்து வைத்திடுவோர்
அறிந்திடவே எழுதுகின்றேன்!
அறிந்ததையே எழுதுகின்றேன்!
அடியேனின் வணக்கங்கள்!

ஆன்மாவையோ ஆண்டவனையோ
அணுவையோ அகிலத்தையோ
ஆனதையோ அழிவதையோ
அறிவதும் உணர்வதும்
ஆன்மீகம் என்றறிவோம்!

ஆன்மீக இலக்கினை
அடைகின்ற பாதைகள்
யோகங்கள் என்றாகும்!
அதன் பிரிவுகள் நான்காகும்!

உருவமோ அருவமோ
ஒருமையோ பன்மையோ
நம்பிய ஒன்றினை
நம்பியேத் தெளிவதும்
அன்பாலே அடைவதும்
பக்தி யோகம் என்றாகும்!

உடலினை வில்லாக்கி
மூச்சுக்காற்றினை அம்பாக்கி
இலக்கினை அடைவதற்கு
இயன்றதைச் செய்வதும்
பயிற்சியாலே வெல்வதும்
ராஜயோகம் என்றாகும்!

‘நான் யார்?’ என்றே சிந்தித்து
தானாய் தன்னுள் கடந்துசென்று
தான் யாரெனத் தெளிவுற்று
தன்நிலை இறைநிலை அறிவதும்
தியானத்தில் இருந்தே மகிழ்வதும்
ஞானயோகம் என்றாகும்!

முடிவை எண்ணி கலங்காது
முயற்சியிலே பிறழாது
முழுமையான சிரத்தையோடு
கர்வம் தலையில் ஏற்றாது
கடமைகளைச் செய்வது
கர்மயோகம் என்றாகும்!

நான்கினில் ஒன்றையோ
நான்கையும் ஒருங்கிணைத்தோ
எவ்வழி விருப்பமோ
அவ்வழி செல்வதே
ஆதியை அடைவதே
ஆன்மீக நோக்கமாகும்!

—செ. இராசா—

No comments: