08/10/2017

நாம் எங்கே போகிறோம்?!




73வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், கவிதையை தெரிவு செய்த நடுவர் நிகரன்
அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.



எந்தைத் தலைமுறை காலத்திலே
விந்தைக் கருவிகள் இல்லாதும்
சிந்தை குன்றாது சிறப்புடனே
தந்தையும் தாயும் மகிழ்ந்தனரே!


பாட்டன் தலைமுறை காலத்திலே
பாடலைப் பதிந்திட இயலாதும்
பாடலில் காவியம் புனைந்தேதான்
பாடியே பாடங்கள் படித்தனரே!

பண்டையத் தமிழர் காலத்திலே
அண்டையர் சிலரின் தொல்லையிலும்
பண்பும் அறமும் குன்றாது
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்தனரே!

நாம் எப்படி எப்படி வாழ்ந்தவர்கள்
நாம் எப்படி இப்படி ஆகிவிட்டோம்?!
நாம் எங்கோ பாதையைத் தவறவிட்டு
நாம் எங்கே எங்கே போகின்றோம்?!

காலத்தை வென்றதாய் கூறிவிட்டு
காலமே இல்லையெனக் கதறுகின்றோம்!
அறிவு பெருத்ததாய் கூறிவிட்டு
அழித்திடும் அணுகுண்டு செய்கின்றோம்!

அருகில் இருப்பதை அறியாமல்
அகிலமே அறிந்ததாய் அலசுகின்றோம்!
பலநாள் நட்பினை மதியாமல்
முகநூல் நட்பினில் மயங்குகின்றோம்!

கள்வனை கயவனை ஆளவிட்டு
கழுதையாய் எரும்பாய்த் தேய்கின்றோம்!
தமிழை மெதுவாய் சாகவிட்டு
தமிழே சிறந்ததாய் கூவுகின்றோம்!

வள்ளுவர் கம்பரை வணங்காமல்
வந்தாரை எல்லாம் வணங்குகின்றோம்!
நாம்போகும் பாதையேத் தெரியாமல்
நாம்எங்கே எங்கே போகின்றோம்?!

-------செ. இராசா------

No comments: