08/10/2017

தனிமனித வாழ்வு பற்றி


தனி மனித வாழ்வுதனை
எட்டு எட்டாய் வகைப்படுத்தி
எளிமையாக பாட்டமைத்த
எழில் கவிஞர் வரிகள் கண்டோம்;

முதல் எட்டில் விளையாட்டும்
இரண்டாம் எட்டில் கல்வியும்
மூன்றாம் எட்டில் திருமணமும்
நான்காம் எட்டில் குழந்தையும்
ஐந்தாம் எட்டில் செல்வமும்
ஆறாம் எட்டில் சுற்றுலாவும்
ஏழாம் எட்டில் ஓய்வென்றும் கூறிவிட்டு
எட்டாம் எட்டிற்கு மேல் ஏனோ...?
நிம்மதி இல்லை என்றார்.....

(எட்டாம் வரிமட்டும்
எட்டா வரியாக
எம்சிந்தை கேட்டிடவே
பின்னோக்கி பயணித்தேன்)

தனி மனித வாழ்வுதனை
நான்காக வகைப்படுத்தி
முன்னோர்கள் கூறியது;

முதல் பருவம் (பிரம்மச்சரியம்) கற்கவும்;
இரண்டாம் பருவம் (கிரகஸ்தம்) வாழவும்;
மூன்றாம் பருவம் (வானபிரபஸ்தம்) ஒதுங்கவும்;
நான்காம் பருவம் (துறவறம்) துறக்கவுமாய்
வாழ்வின் நிலைகளை விளக்கியது.

(இன்னும் சுருக்கமாக
ஆனால் விளக்கமாக
கருத்தில் ஆழமாக
தமிழ் மறையில் காண்கின்றேன்)

தனி மனித வாழ்வுதனை
இரண்டாக வகைப்படுத்தி
வள்ளுவர் கூறுகின்றார்;

இல்லறம் வாழ்வதெல்லாம்
துறவற வாழ்வுக்கென
கூறாமல் கூறியதை
அறமாக விளக்கியதை
அறிந்தாலே சிறப்பு அன்றோ?

—�-செ.இராசா—

No comments: