05/01/2023

குரங்கு

 


குரங்கு சேட்டை என்றும்
குரங்கு புத்தி என்றும்
குரங்கை வைத்தே ஏசுகிறோமே
குரங்கென்றால் அவ்வளவு மட்டமா?
 
யார் சொன்னார்கள்?
குரங்கை வைத்துதானே
வாயு புத்திரனென்று
வழி படுகின்றோம்..
 
ஆனால்....
குரங்கைப் பார்த்துதானே
கொரில்லாப் படையென்று
குழி பறிக்கின்றோம்..
 
எனில்
எத்தனையோ உயிர்களிருக்க
எதற்காக குரங்கின்மேல்மட்டும்
இத்தனை ஈர்ப்பு?
 
48 குரோமோசோமில் இருந்து
46 குரோமாசோமாக குறைந்தபோது
ஐந்தாம் அறிவுள்ள குரங்கு
ஆறாம் அறிவுள்ள மனிதனாக
உரு மாறியதே...
அது விந்தை முரணல்லவா?
 
இருந்தும்...
மலையில் இருக்கும்வரை
மானத்தோடு வாழ்ந்த குரங்கு
மலையடிவாரம் வந்தால்
மனிதனைப்போல் கையேந்துகிறதே..
அதுவும் முந்தை நரனல்லாவா?
 
இதிலிருந்தே தெரியவில்லையா?
இறங்கி வந்தால்
இயல்புநிலை மாறுமென்று...
எனில்...
இறங்கினால் எல்லாம் மாறுமா?
 
அதிலென்ன சந்தேகம்...
கால் நீண்டது..
வால் நீங்கியது..
முதுகு நிமிர்ந்தது..
மூளை வளர்ந்தது...
குரல் மொழிந்தது..
தரம் உயர்ந்தது...
 
இருந்தும்...
இந்த மனம் தான்
இன்னும் தாவிக்கொண்டே இருக்கிறது...
குரங்கைப் போலவே...
 
✍️செ. இராசா

No comments: