21/02/2021

யார் கைகேயி?

 


யார் கைகேயி?
********************
🌷🌷🌷🌷🌷🌷🌷
நல்லவரா? கெட்டவரா?
நல்லவர்போல் நடித்தவரா?
நல்லவைகள் நடந்தேற
பொல்லாராய் ஆனவரா?
பொல்லாதார் விட்டொழிய
பொய் வேடம் பூண்டவரா?!

உண்மையிலே யாரென்ற
உண்மையினைக் கண்டறிவோம்
உள்மெய் யாதென்றே
உளமெய்யால் ஓர்ந்தறிவோம்.

யாரிவர்?!
************
🔥🔥🔥🔥🔥
எதிரில் உள்ளோரின்
எதிர்காலம் கண்டறியும்
பஞ்சாங்க சாத்திரத்தை
பகுத்தறிந்த மன்னராம்
கேகேய இராசாவின்
கைகேயி புத்திரியும்
அப்படியே அப்பாபோல்
அப் படிப்பைக் கற்றவரே...
 

தசரதன்_பஞ்சாங்கம்_பார்த்தல்

தான் கோன் ஆனாலும்
தன் கோன் தொடர்ந்திட
தனக்கோர் மகனின்றி
தசரதக்கோன் தேடிவர
இறந்த காலத்திலே
இருந்தீரே சூரியனாய்
இணையராய் அந்நாளில்
இணைத்திட்ட மூவரைப்போல்
நிகழ்கின்ற காலத்திலும்
நிழலாக்க சம்மதித்தால்
நிஜமாக பெற்றிடுவீர்
நின் நிழல்போல பெற்றிடுவீர்;
அன்றைய காயத்ரியே
இன்றை கோசலையாய்
அன்றைய சாவித்திரியே
இன்றைய சுமத்திரையாய்
அன்றைய சரஸ்வதியே
இங்கேயாம் கைகேயியாய்
சகலரையும் மணந்திட்டால்
சக அலர் மறந்திடலாம்..
என்கின்ற யோசனையை
என்றவள் சொன்னவுடன்;

எந்தன் பேரனுக்க
மண்ணாளும் உரிமையென
கேகேயப் பேரரசன்
கேட்டானே வாக்கொன்றை...

கைகேயியின் அழகு கண்டு
கைப்பிடித்த தசரதனும்
கைகேயின் கைக்குள்ளே
கைப்பந்தாய் ஆனாலும்
கால்பந்து விளையாட
கால் டஜன் பிள்ளையின்றி
என்ன வாழ்க்கையென்று
ஏங்கிய மகத்தோடு
கானக வேட்டைக்கு
கோனவன் செல்கின்றான்!

#தசரதன்_பெற்ற_சாபம்

நீர்க்குடம் மோர வந்த
பாலகனின் பானை ஓலி
கானக யானையென
கற்பனையாய் யூகித்து
வேகமாய் விட்ட அம்பு
நாகமாய்ச் சீண்டிவிட
சிரவணன் எனும் சிறுவன்
சிரம் சாய்ந்தான் சவமாக..

தவறையுணர்ந்த மன்னன்
அவதியிலே பதறிவர
ஐயா என்றழைத்து
அவன் நிலையை இயம்புகின்றான்...

குருட்டுப் பெற்றோரின்
குடும்ப நிலை கண்டு
இருட்டுப் பெற்றோருக்கு
இனிநான் மகனென்றான்...
ஏற்காத பெற்றோரும்
இட்டாரே சாபமொன்று..

நான் படும் வேதனையை
நீயும் படுவாயெனெ
வான் முட்டும் கோபத்தில்
வார்த்தாரே கோபமுனி..
வார்த்தைகள் அத்தனையும்
வாட்டுகின்ற சாபப்பிணி

#நான்கு_புத்திரர்கள்
**********************
கோசலைக்கு இராமனும்
கைகேயிக்கு பரதனும்
சுமத்திரைக்கு இருவராய்
இலக்குமண சத்ருகனும்
யாகத்தின் பயனாக
யோகமாய் வந்தடைய
புத்திரர்கள் கண்ட வேந்தர்
புத்துயிர் பெற்றுவிட்டார்!

கால ஓட்டத்தில்
காதிலே நரை வர
என்ன செய்வதென்ற
எண்ணம் வலுவடைய
இராவோடு இராவாக
இராமனை மன்னனாக்க
இராசாங்க சபைகூட்டி
இராசா முன் மொழிய
அமைச்சர் அனைவருமே
அமைதியாய் ஆர்ப்பரித்தார்!

#கைகேயி_கேட்ட_வரம்
*************************
இச்சேதி தெரியாமல்
அச்சச்சோ உறங்குகிறாள்?
இப்பேடி இவளுக்கு
எப்படி நான் உரைத்திடுவேன்?!
என்றெண்ணி கூனியும்
ஒன்றொன்றாய் ஊதியதில்
கைகேயி அன்னையும்
கைங்கர்யம் காட்டுகிறாள்...

வரங்கள் இரண்டாலே
வகுக்கின்றாள் இரு திட்டம்..
இராமன் காடாள்வான்
பரதன் நாடாள்வான்
தீட்டிய திட்டத்தால்
தீட்டானாள் கைகேயி...
இல்லானும் மரிக்கின்றார்
எல்லோரும் சபிக்கின்றார்..
மைந்தனும் வெறுக்கின்றார்
மற்றவரும் ஒதுக்குகின்றார்..
இதெல்லாம் தெரிந்த கதை
இதிலென்ன இருக்கிறதா?!

ஆம்....#யார்_கைகேயி?!
**************************
ஊருக்கும் புரியாத
யாருக்கும் தெரியாத
உண்மை யாதென்ற
உண்மையை அறிந்திடுவீர்;
உத்தமத் தாய்ச்செயலை
உணர்ந்தாலே போற்றிடுவீர்!

இராம அவதாரம்
இனிதே இடம்பெறவும்
இராமனும் அதற்காக
இடம்விட்டு இடம்பெயரவும்
தசரதன் பெற்ற சாபம்
தன் விதி செய்திடவும்
தந்தைக்குத் தந்த வாக்கை
தன் பதி செய்திடவும்
எல்லாப் பழிகளையும்
ஏற்றிட்ட கைகேயி
பொல்லாப் பழி சுமந்த
நல்லாள் என்றறிவீர்...!!!

✍️செ. இராசா

No comments: