24/02/2021

அனுபவப் பதிவு- 1-----------------அஸ்ஸாம் மேகாலயா---- கட்டுரை

 #அஸ்ஸாம்_மேகாலயா


சென்னையில் இருந்து அஸ்ஸாம் போவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நான் அங்கே பணிபுரியும்போது வாசித்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலே என்றால் அது மிகையல்ல. ஆம் கல்கத்தாவில் பிறந்த அவர் சென்னை கொழும்பு வழியாக அமெரிக்கா சென்று உலகம் முழுவதும் சுற்றினாரல்லவா?! அதேபோல் நாமும் எல்லா இடங்களும் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படி இதுவரை போயிருக்கிறேனா என்றால் உண்மையில் இல்லைதான். ஆனாலும், இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கும்போது இங்கே எல்லாம் போகவேண்டும் என்று சிறுவயது முதலே ஒரு உள்ளார்ந்த ஆசையும் என்னுள் இருந்திருக்கிறது.

சென்னையில் நான் C.R. ராஜு என்ற ஆர்க்கிடெக்கிடம் பணிபுரியும்போது (Dec 2001- Jan 2003) அங்கே வேலைபார்த்த மூத்த பொறியாளர் செஞ்சிலு என்பவர் என்னிடம் 'என்ன தம்பி, இராஜமாணிக்கம் அஸ்ஸாம் போறீங்களா?!" என்றார். நானும் ஏதோ ஒரு அவசரத்தில் "போயிடலாம் சார்" என்றேன். அங்கே என்ன வேலை எப்படி போகவேண்டும் என்றேன். அதற்கு அவர் ஒரு இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விமானம் மூலம் போகலாம். பயணச்சீட்டு போட்டுச்சென்றால், அவர்கள் இறங்கியவுடன் தந்துவிடுவார்கள் என்றார்.
என்ன இது வெளிநாடு மாதிரி விமானம் என்றெல்லாம் மிகப்பெரிய வார்த்தை பேசுகிறார்களே என்று ஒரு சின்ன பயம் உடனே தொற்றிக்கொண்டது. மேலும் அஸ்ஸாம் என்றாலே உல்பா தீவிரவாதிகள் அதுஇதுவென்று ஏற்கனவே மணிரத்னம் உயிரே படம்மூலம் கூறியுள்ளாரல்லவா அதெல்லாம் உடனே மனக்கண்முன் ஓட ஆரம்பித்தது. சரி சரி பார்ப்போம் என்று ஒரு குழப்ப நிலையில் சென்னையில் இருந்து பொங்கல் விடுமுறைக்கு ஒருவாரம் எனது சொந்த ஊர் (அம்மன்பட்டி, சிவகங்கை) சென்றுவிட்டேன்.

பிறகு ஒரு வாரம் கழித்து சென்னை வந்தால் செஞ்சிலு அண்ணா மிகவும் கடிந்துகொண்டார். என்னப்பா உன்னை ஒரு வாரமா தேடுகிறேன். நீ கிடைக்கவே இல்லை. சரி சரி அஸ்ஸாம் எப்ப போற? என்றார். எனக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. உடனே அப்பாவிடம் சொன்னேன். அவர் உடனே நானும் அஸ்ஸாம் வரை துணையாக வருகிறேன் என்றார். எனக்காவது கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேச வரும். அப்பாவிற்கு அதுவும் இல்லை. ஆனால் அவரின் தைரியம் என்னிடம் இல்லை. சரி நாங்க தயார், ஆனால் விமானத்தில் அல்ல தொடர்வண்டியில் போகிறோம் என்று செஞ்சிலு அண்ணாவிடம் கூறினேன் உங்கள் விருப்பம் என்றார். என் முதலாளி ராஜு ஆர்க்கிடெக்டிடம் சொன்னபோது மிகவும் யோசித்து கூடுதலாக 3000 ரூபாய் கொடுத்தார். (என் சம்பளமே அப்போது அவ்வளவுதான். என்னைப்போல் வேறு ஒரு ஆள் கிடைக்கவே இல்லை என்று பின்நாளில் கூறினார் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது)

நானும் அப்பாவும் சென்னை சென்ட்ரல் பொனோம். சென்னை எக்மோர் நான் அடிக்கடிப் போவேன். ஆனால் சென்னை சென்ட்ரல் அன்றுதான் முதன்முதலாகச் சென்றேன். அங்கு சென்றவுடனே ஒரே ஹிந்தி வாடை. வடநாட்டு முகங்கள் என்னைக் கலேபரம் ஆக்கியது. மேலும் அங்கிருந்து அஸ்ஸாம் போக டிக்கெட்வேறு கிடைக்கவில்லை.

அப்புறம் என்னாச்சு?

.... ‌தொடரும்

No comments: