27/02/2021

அனுபவப் பதிவு-4------------தோல்விப் பயணமும் திருப்புமுனையும்---கட்டுரை

 

 


 அஸ்ஸாம்_மேகாலயா

ஆரம்பத்தில் என்மேல் அவ்வளவு பாசமாக இருந்த முகர்ஜி என்னை கவுகாத்தியில் உள்ள கமக்கியா மந்திர் என்ற கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்றுள்ளார். சிவன் பார்வதிமேல் உள்ள கோபத்தில் துண்டு துண்டாக வெட்டிவிட்டாராம். அதில் தொடைப்பகுதி விழுந்த இடம்தான் இந்த கமக்கியா மந்திர் என்றார்கள். கோவிலிலும் சிலை கிடையாது. தொடைப்பகுதி உள்ள மாதிரி ஒரு கற்சிலையே இருக்கிறது.கவுகாத்தி அருகே மலைமேல் உள்ளது அக்கோவில். அப்படிப்பட்ட கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்ற முகர்ஜி வில்லனாக மாறுவார் என்று நினைக்கவே இல்லை. நான் வெளியேறிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார்.

எப்படியோ ஒரு அஸ்ஸாம் நண்பரின் உதவியால் முதலாளிக்குத் தகவலைத் தெரிவித்துவிட்டு முகர்ஜிக்குத் தெரியாமல் தமிழ்நாடு கிழம்பத் தயாரானேன். எப்போது வேண்டுமானாலும் அஸ்ஸாம் வரலாம் என்ற அந்த முதலாளியின் அன்புக் கோரிக்கையே பின்நாளில் நான் திரும்பி வருவதற்கும் காரணமாக இருந்தது. ஆம் அங்கிருந்து கிளம்பி சொந்த ஊர் வந்து துபாய் செல்லத் தயாரானேன். துபாய் என்றுதான் சொன்னார்கள் ஆனால் துபாய் அல்ல தோகா கத்தார் என்று பயணச்சீட்டில் போட்டிருந்தது. அதுகூட அப்போது தெரியவில்லை. எப்படியோ அஸ்ஸாமில் இருந்து வந்த சில நாட்களிலேயே 2003ல் கத்தார் சென்றடைந்தேன்.

அங்கே என்னை QAQC என்ற பணியில் அமர்த்தினார்கள். அஸ்ஸாமில் இராஜா மாதிரி பணியில் இருந்த நான். இங்கே இரும்பு பீமில் இரண்டு ஓட்டைகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்து குறித்து வைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண வேலை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் நான் தொலைபேசியில் தெளிவாகக் கூறி இருந்தேன், வந்தால் பொறியாளர் பணிக்கே வருவேன் என்று. ஆனால் அப்படி இல்லை. இரண்டு நாட்களிலேயே இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினேன். எனில் வேறு வேலை பார்த்துக்கொள்ள அனுமதி தந்தார்கள். ஆனால் அவர்களின் அறையில் தங்க அனுமதி இல்லை. ஓரு அரபியின் வீட்டில் கல்லலைச் சேர்ந்த சமையல் வேலை செய்யும் ஒருவரின் அறையில் அந்த அரபிக்கே தெரியாமல் தங்கி இருந்து கத்தாரில் வேறு வேலை தேடினேன்‌. கிட்டத்தட்ட 17 நிறுவனங்களில் ஏறி இறங்கினேன்‌. வேலை இருந்தால் விசா இல்லை. விசா இருந்தால் வேலை இல்லை. நிறைய அவமானங்களையும் சந்தித்தேன். வீட்டிற்கு போன் பண்ணி அப்பாவிடம் சொன்னால், செத்தாலும் அங்கேயே சா. இங்கே வந்துவிடாதே அசிங்கம் அவமானம் என்றார்கள். எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்று நினைத்துதானே வந்தோம். ஆனால் நம்மை நமக்கான வேலை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் அப்பா என்றேன். அதற்கு கக்கூஸ் கழுவும் வேலையென்றாலும் நீ பார்க்கத்தான் வேண்டும் என்றார் என் தந்தை. நான் அதுவும் தவறில்லை அப்பா. ஆனால் நான் அவ்வேலைக்கு வருவதாகச் சொல்லவில்லையே...என்றேன். அப்பா கேட்கவில்லை.

சரியான வேலை கிடைக்காமல் தோல்வி நிலையில்தான் கத்தாரில் இருந்து திரும்பினேன். ஒரு கூட்டமாக வந்து திருச்சி விமான நிலையத்தில் ஏற்றிவிட்டவர்கள் திரும்பி வரும்போது யாருமே வரவில்லை என் தம்பி சதீஸைத்தவிர. அங்கிருந்து பேருந்தில்தான் வீடுவந்து சேர்ந்தோம். அப்பா என்னிடம் பேசவே இல்லை. வீட்டைவிட்டு போகச் சொன்னார்கள். மனதே சரி இல்லை. தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது அதில் சுயநலம் உண்டென்று நினைத்தேன். அதற்குப்பதில் வேறு ஒருவருக்காக சாவதேமேல் என்று நினைத்ததால் மீண்டும் அஸ்ஸாம் போகலாம் என்று தீர்மானம் செய்து முதலாளி இரபிஜெயின் அவர்களுக்கு ஒரு கடிதம் நண்பர் சிவக்குமார் அப்பாவின் உதவியுடன் எழுதினேன். ஆம்....அஸ்ஸாம் அன்றைய நிலையில் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல் குழுக்கள் அதிகம் நிறைந்த மாநிலமாகும். பிற்காலத்தில் நானும் பாதிப்புக்குள்ளாவேன் என்று தெரிந்தும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் போய் ஒரு மாதம் ஆனபின்னும் பதில் வரவில்லை.

சரியாக ஒருமாதம் ஆனபின்னே ஒருநாள்..

....தொடரும்

✍️செ.இராசா

No comments: