06/02/2021

எது கவிதை? கவியரங்கம்- தலைமைக் கவிதை



தமிழ்த்தாய் வாழ்த்து
***********************

ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்த தொல்காப்பியமாய்
திருவள்ளுவரின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசரின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கென் முதல் வணக்கம்!

அவை வணக்கம்
***********************
சுயநலம் ஏதுமின்றி
பொதுநலமே குறிக்கோளாய்
இணையத்தில் மட்டுமின்றி
இலக்கியத்தின் பேரவையாய்
உலகம் யாவிலுமே
விழுதுகள் பரப்பி இங்கே
வியத்தகு விருட்சமாய்
வீற்றிருக்கும் நற்சபையைப்
பார்த்துப் பார்த்து வியக்கின்றேன்
பார்த்தன்போல் பணிகின்றேன்!

எது கவிதை?
****************
எதுகையும் மோனையும்
எப்போதும் மாறாமல்
அடிகளின் அளவுக்குள்
அசைசீர் மீறாமல்
இலக்கண வரம்பிற்குள்
இயற்றுகின்ற ஒன்றே.........கவிதையா?

உணர்ச்சியின் உந்துதலில்
உள்ளக் கிளர்ச்சியுற்று
அடிமன எண்ணங்கள்
அப்படியே எழுச்சியுற்று
மரபை உடைத்தெறிந்து
மனம்போல் படைப்பதே.... கவிதையா?

நறுக்கென்று சுருக்கமாய்
நச்சென்று சொல்லாமல்
இன்னும் எத்தனை நாள்
இப்படியே செய்வீர்கள்..?!!
என்றிவரைச் சாடிவிட்டு
எங்கிருந்தோ இறக்குவதே... கவிதையா?

இது எதிலும் சேராமல்
....புது விதமாய் உடைபோட்டு
....புதுப்புது படிமங்களில்
....புதிர்போல நடைபோட்டு
எளிதாய்ப் புரியாமல்
எப்படியோ செய்வதே....கவிதையா?!

இது கவிதையா?
அது கவிதையா?
எதுதான் கவிதையென
ஒவ்வொரு கவிதை வடிவத்தையும்
இரண்டிரண்டு கவிஞர்களாய்ச் சேர்ந்து
கவி பாட இருக்கிறார்கள்
அவர்கள் அனைவரும் பாடி முடித்தபின்
அடியேனும் என் கருத்தை இயம்புகிறேன்...
அதுவரையும் எல்லாக் கவிதைகளையும்
ருசிக்க வேண்டுகின்றேன்

மரபுக் கவிதை
*******************
இரண்டே அசைகளை
............இடம்வலம் மாற்றிட
எத்தனை எத்தனைச் சீர்கள்?

சீர்களின் வரிசையைச்
..................சீராய் அமைத்திட
எத்தனை எத்தனை ஓசைகள்?

ஓசையின் சந்தத்தை
........ஒழுங்காய்ப் பிணைத்திட
எத்தனை எத்தனைக் கவிகள்?

கவிகளை எல்லாம்
......................கட்டிக் கோர்த்திட
எத்தனை எத்தனைக் காவியங்கள்?

ஆம்....
இருப்பது இரண்டே அசைகள்!!!
இந்த அசைகளை அடுக்கும் விதத்தை
இயல் இலக்கியத்தில் ஆய்ந்தார்கள்..
இந்த அசைகள் இயங்கும் இயைபை
இசைப் பாடல்களில் ஆய்ந்தார்கள்...

இவை இவை இப்படியென
இறுதி முடிவுக்கு வந்தார்கள்
அவர்கள் யாத்த யாப்பிலக்கண விதிகளில்
அன்று தொட்டு இன்று வரை
அழகுநடை போடுகிறது
இந்த மரபுக்கவிதைகள்

எளிமையாகச் சொல்வதெனில்
எழில்மிகு ஓசைதரும்
அசைகளின் இசைவே
மரபுக் கவிதைகள்

ஆம்...
நேரசை நிரையசை- இந்த
ஈரசை விதிகளுக்குள்
என்றைக்கும் இயங்குகிறது
இன்பத் தமிழென்னும் ஓரிசை!
நம் முத்தமிழென்னும் பேரிசை!

அசையும் அசையும் அடுக்கிய சீரின்
இசைவில் எழுமே இசை

---குறள் வெண்பா----

சந்தக் கவிதை
******************
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்க

----இது கம்பர் எழுதிய விருத்தம்!

சந்தக்கவி தந்தக் கவியென
விந்தைக்கவி தந்தக் கவியென
என்னக்கவி இந்தக் கவியென
...................................நினையாமல்
சிந்தைக்கவி சிந்தும் கவியென
சின்னக்கவி தத்துக் கவியென
இந்தக்கவி உந்தன் கவியென
.................................நினைவாயோ
அன்புக்கவி கொஞ்சும் கவியென
இன்பக்கவி கொட்டும் கவியென
எண்ணக்கவி வண்ணக் கவியென
.....................................தமிழோடு
உள்ளக்கவி சொல்லும் கவியென
நல்லக்கவி உண்மைக் கவியென
வெல்லக்கவி வெள்ளக் கவியென
...................................வருவாயோ
அருள்வோயோ முருகா அருள்வாயோ!!!

----இது யார் சந்தம்? அருணகிரி நாதரின் சந்தம்
_அடியேனின் வரிகள்

மாயஜால வித்தைகோடி காட்டுகின்ற வாழ்விலே
ஞாலஞான வித்தைகாட்டி காத்திடுவாய் ஈசனே!!
கோடிகோடி சூதுகோடி சூழுகின்ற வாழ்விலே!
கோடிசூதை மோதிமோதிக் கொன்றிடுவாய் ஈசனே!

இது யார் சந்தம்? சிவவாக்கியர் சந்தம்
--அடியேனின் வரிகள்

இப்படிச் சந்தக்கட்டுக்குள்
சொந்த மெட்டுக்குள்
எப்படிக் கச்சிதமாய் அமைக்கிறோமோ
அதுவே சந்தக்கவிதை!

19 ஆம் நூற்றாண்டு முன்பு வரை
பாடிய பாடல்களும்
ஏற்றிய கவிதைகளும்
எல்லாம் இசை வடிவங்களே...

செப்பலோசை ஏந்திய வெண்பாவும்
அகவலோசை கொண்ட ஆசிரியப்பாவும்
துள்ளலோசை துள்ளும் கலிப்பாவும்
தூங்கலோசை கொஞ்சும் வஞ்சிப்பாவும்
ஒவ்வொரு ஓசையுடனும்
ஒவ்வொரு சந்தத்துடனும்
விருத்தங்களில் எழுந்த காவியங்களுமாய்
அனைத்தும் இசை கூட்டக்கூடிய கவிதை வடிவங்களே...

ஆகவேதான் கவி பாடலாம் என்பார்கள்….

பின்னர் ஏற்பட்ட
கால மாற்றத்தின்
ஞால வேகத்தில்
மொழியின் நடையும்
கவியின் உடையும்
நாகரிக நங்கைபோல்
வேகமாய் மாறியது...
இன்னும் மாறிக்கொண்டே இருக்கிறது...

அவற்றை ஒவ்வொன்றாய்க் காண்போம்

புதுக்கவிதை
****************
ஆடிவரும் ஆறுக்கும்
ஓடிவரும் ஓடைக்கும்
அணைகட்ட முயன்றிடலாம்
அதிலொன்றும் தவறில்லை...

பீறிவரும் வெள்ளமும்
மீறிவரும் சுனாமியும்
வரப்பிலே வா என்றால்
வரைமுறையை ஏற்றிடுமா?!
இல்லை
வரம்பினை மீறிடுமா?!

இப்படித்தான் பிரசவித்தது
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள்
ஆம்..
மரபின் வரம்புடைத்து
மனம்போல கவி சமைத்து
மணமணக்க படையலிட்டார்
புதுக்கவிதை விருந்து வைத்தார்...
புதுக்கவிஞர்கள்.....

நவீனக்கவிதை
********************
என்னதான் புதுக்கவிதை என்றாலும்
அங்கேயும் விதிமுறை உள்ளதே?!
எதுகையோ மோனையோ இல்லை
ஏகாரமோ இயைபோ...
அடி அடியாகவோ
பத்தி பத்தியாகவோ... இப்படி
மொழி அலங்காரமின்றி
மொழிந்திடுமா புதுக்கவிதை?!

இல்லையே.....

ஓசை ஒழுங்கோடு பயணிக்கும்
ஒய்யாரக் கவிதைக்கு
புதுக்கவிதை என்றுரைத்தால்
அதையும் உடைத்தெறிந்து
படிமங்களில் பொருள் வைத்து
வெடிவெடியாய் வெடிக்கின்ற
நவீன காலக் கவிதைகளே
நவீனக் கவிதைகள்....

எனக்கு மிகவும் பிடித்த
என்னை மாற்றிய கவிதை...
இதோ

"இந்த உலகப்பூ......"

ஹைக்கூ
*************
ஜப்பானில் தோன்றி
அகிலமெங்கும் பரவி வருகிறது
ஹைக்கூ

மூன்றாம் அடியில்
முக்தி அடைந்து விடுகிறது
ஹைக்கூ

சிறிதாய் இருந்தாலும்
ஆழம் அதிகமாய் இருக்கிறது
ஹைக்கூ

ஆம்.....
சொல்வதைச் சுருக்கமாய்ச் சொல்லி
சொல்ல வருவதை சொல்லாமல் சொல்லி
இறுதிச் சொல்லில் இதயத்தை உலுக்கி
இக்கால வடிவமாய் இருக்கின்ற கவிதையே
ஹைக்கூ.....

ஹைக்கூ
இதற்கும் இலக்கணம் உண்டு
இதை அறியாமல் செய்தால்
அது ஹைக்கூவே அன்று

ஹைக்கூவின் சிறப்பென்பது
மரபின் வெண்பாவைப் போல்
அழகிய புதுக்கவிதை போல்
இங்கும் ஈற்றடியே பிரதானம்

ஜப்பானில் இருந்து இருக்குமதி ஆனாலும்
இந்திய மொழிகளில் அதிக நூல்களை
ஏற்றிய பெருமை தமிழுக்கே உண்டாம்
சொல்கிறது இணையம்....
ஏனோ இன்னும் ஏற்க மறுக்கிறது
சிலரது இதயம்...

இருக்கட்டும்

வசன கவிதை
*******************
ஆமாம்..
வசனம் எப்படி கவிதையாகும்?
வசனம் கவித்துவமானால்
வசனமும் கவிதையாகும்- அது
வசன கவிதையாகும்...

வருங்காலத் தலைமுறைக்கு
வரலாற்றைச் சொல்வதற்கும்
மரபியல் இலக்கியத்தை
மறக்காமல் செய்வதற்கும்
உரைநடை தேகத்தில்
உயர்நடை கவியேற்ற
வார்த்தைகளை அறிந்து
வார்த்தை-களை அரிந்து
வார்த்தை கலை என்றாய்ந்து
வார்த்தைகளால் வார்ப்பதே
வசன கவிதை...

மீண்டும்
எது கவிதை என்றால்?
******************************
கசக்கி நசுக்கி அமுக்கி அழுத்தி
உருண்டு புரண்டு முரண்டு திரண்டு
உடைந்து குடைந்து நுழைந்து புகுந்து
செதுக்கி எடுப்பது கவிதையா?

இல்லை

கருத்து புதைந்து வெடித்து முளைத்து
சிலிர்த்து துளிர்த்து செழித்து வளர்ந்து
மலர்ந்து விரிந்து மணந்து கனிந்து
பிறந்து வருவது கவிதையா?

எது கவிதை?!

எது கவிதை என்பதெல்லாம்
இது கவிதை என்பதெல்லாம்
இதுவும் கவிதை என்பதெல்லாம்
இதுவே கவிதை என்பதெல்லாம்
இதுவல்லவோ கவிதை என்பதெல்லாம்
………………………
………………………
அது தரும் பலன் பொறுத்ததே
அது பெரும் மனம் பொறுத்ததே

வாழ்க கவி
வாழ்க தமிழ்
வாழ்க வாழ்கவே

நன்றி நவில்தல்
*********************
எத்தனையோ கவிஞர்கள்
எழில்கூட்டிய மேடையிலே
எளியோனாம் அடியேனை
ஏற்றிவிட்ட நண்பர்களுக்கும்,

இங்கே கவி பாடிய அனைத்துக் கவிஞர்களுக்கும்

தலைவர் திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும், சகோதரர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கும் மற்றும் கவிதை தொடுத்த அனைத்து கவிஞர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன்..

மேலும், சென்னை, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், மதுரை...... இலங்கை உலகெங்கும் கிளைகள் பலபரப்பி
தமிழறம் விதைக்கின்ற தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை தளத்தினையும் மனமார வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

✍️செ.இராசா

No comments: