04/12/2023

அம்மா



முத்தையா பிள்ளைக்கும்
சகுந்தலா அம்மைக்கும்
மூத்த பிள்ளையாக
முத்தான பிள்ளையாக
தேவகோட்டை மாநகரில்
தேவதையாய்ப் பிறந்துவந்த
என்னருமைத் தாய்பற்றி
இங்கேநான் பதிந்திடவே
இயன்றவரை முயலுகின்றேன்..
ஈந்தவளை நினைந்திடவே....

நகரத்தில் பிறந்தவளை
நரகத்தில் தள்ளளாமா?!
சிலையெனச் செதுக்கியதை
சிதைத்திட எண்ணலாமா?!
பதினெட்டே வயதுவந்த
பாவையினைக் கூட்டிவந்து
மதிகெட்டார் எல்லோரும்
மாலையினை மாற்றவைத்தார்!

வெண்ணிலாவைத் தூக்கிவந்து
தார்டின்னில் போட்டதுபோல்
தென்றலைத் திசைமாற்றி
புயலோடு விட்டது போல்
மெல்லினத் தாயவளை
வல்லினத்தில் சேர்த்துவிட
சுலோசனா அம்மாவும்
செந்தில் நாதர் வசமானாள்!

செட்டிநாட்டில் பிறந்தவளை
பட்டிக்காட்டில் விட்டதினால்
வீட்டுக்கும் ஊத்துக்கும்
ஊத்துக்கும் வீட்டுக்குமாய்
அவளோடிய தூரத்தை
ஒருவாறு கணக்கெடுத்தால்
புதுடெல்லி தூரமெனப்
பொதுவாகச் சொல்லிடலாம்!

ஒருவழியாய் இருவருக்கும்
மூன்று பிள்ளை பிறந்துவிட
மூத்தபிள்ளை இராசாவை
தேவகோட்டை அம்மாச்சிக்கும்
இரண்டாம் பிள்ளை இரமேஷை
திருச்சி அத்தைக்குமாய்
மூன்று பிள்ளையிலே
இரண்டைத் தள்ளிவிட்டு
மூன்றாம் பிள்ளையான
ஜானகிராமனை மட்டும்
பெற்றவள் வைத்திருந்து
மற்றதை நினைத்திருந்தாள்...!!!

கடிதாசி எழுதனும்னாலும்
கடிதாசியப் படிக்கனும்னாலும்
தொலைப்பேசி வருதுன்னாலும்
தொலைக்காட்சி பார்க்கனும்னாலும்
அம்மாவத் தேடித்தான்
அனைவருமே வருவாக..

தனக்கான முடிவெடுக்கத்
தனியாக விட்டதில்லை...
தமக்காக வாழ்ந்திடவும்
தாயவளும் நினைக்கவில்லை..
ஊராட்சித் தலைவராக
ஒருமுறையே ஆனாலும்
ஊர்மெச்சும் பேரெடுத்த
உத்தமிதான் எங்காத்தா...

சாதனைப் பெண்மணினா
ஜான்ஸிராணி மட்டும்தானா?
சாதாரணப் பெண்மணிக்கு
சமையலறைக் கொட்டில்தானா?

வாக்கப்பட்ட இடத்திலயும்
வாங்கிக் கட்டிக்கிட்டு
பொறந்த இடத்திலயும்
பொல்லாப்ப வாங்கிக்கிட்டு
நல்ல சாப்பாட
நாளெல்லாம் ஆக்கிப்போட்டு
தனக்காக வாழாம
பிறருக்காய் வாழ்ந்துவரும்
தாயைப்போல் யாரிருக்கா?; என்
தாயைப்போல் தாயேருக்கா....!!!

✍️செ. இராசா

No comments: