21/12/2023

கண்ணகியின் காதல்


(முதலாம் பிரிவில்)

காதலென்றால் என்னவென்று
.......கற்பித்த நாயகனே
வேதனையை தந்தெம்மை
.......விட்டாலும்- சோதனையாய்
என்றைக்கும் மாறாத
.......எம்காதல் உண்மையென
நன்குணர வந்திடுமோர்
.......நாள்!
(1)

வயதுக்கு வந்ததுமே
.......வந்தெம்மைச் சேர்ந்து
நயமோடு தந்தீர்நல்
........வாழ்வு- வியப்புறவே
ஆண்டுசில போனவுடன்
........ஆர்வமில்லை என்பதுபோல்
வேண்டுமெனச் சென்றீரோ
.........வேறு?
(2)

கருநீலக் கண்ணழகி
......கண்ணகிதான் என்றீர்
கருத்தபெண்ணைக் காதலியாய்க்
......கண்டீர்- விருப்பமுற
கட்டியவள் நெஞ்சத்தைக்
........காயப் படுத்திடவே
விட்டுவிடத் தோன்றியதோ
.....வீடு?
(3)

மாதவம் செய்தவர்க்கே
....மாவரம் கிட்டுமெனில்
மாதவி பெற்றவரம்
....மாவரமே- பாதகியாய்
மாதவம் ஏதுமின்றி
.....மாவரம் பெற்றிருந்தும்
மாதவனை ஏன்தொலைத்தேன்
.....நான்?
(4)

காவிரிபூம் பட்டினத்தில்
...கைபிடித்த அந்நாளை
ஓவியமாய் எந்நெஞ்சில்
...ஒடவிட்டால்- தாவிவரும்
சந்தோஷம் போலதுபோல்
... சந்தோஷம் வேறுண்டா?
சிந்திக்கத் தோன்றும்
.... சிலிர்ப்பு!
(5)

போய்வாரேன் என்றீரே..
....போனீரே வந்தீரா?
தேய்பிறையாய் தேய்ந்தேனே
....தேடிநீர்ப்- பாய்ந்தீரா?
ஆனாலும் நான்கொண்ட
...அன்பென்றும் மாறாது!
தானாக நீயுணர்வாய்
....தான்!
(6)

ஆடல் கலைகாண
....ஆர்வமுடன் சென்றநீர்
ஆடல் அழகியுடன்
.....ஆர்வமுடன்- கூடுவதாய்
பார்த்தவர்கள் சொல்கையில்
.....பைத்தியம்போல் நானாகி
வேர்த்து விறுவிறுத்தேன்
......வீழ்ந்து!
(7)

என்னை மறந்தாலும்
...என்னைத் துறந்தாலும்
என்னன்பு மாறாமல்
...எப்போதும்- உன்நினைவைத்
தூக்கிச் சுகங்காணும்
...தொந்தரவு செய்யாது
நோக்கி நகர்கின்றேன்
....நொந்து!
(😎

அன்புசெய் அன்பர்க்கே
...அன்பென்றால் அன்புண்டோ?!
அன்புசெய் அன்பர்கள்
...அன்பிலார்- என்றாலும்
அன்பில் குறைவில்லா
...அன்புடையார் என்றானால்
அன்பிலாரும் வைப்பரே
...அன்பு!
(9)

கெட்ட சகவாசம்
.....கேடுதரும் என்றறிந்து
விட்டு விலகியின்று
.....வீட்டுக்கு- பட்டென்று
கட்டிய என்னோடு
.....கைகோர்க்க வந்தாலும்
நட்டம் உமக்கில்லை
.....யே!
(10)

✍️செ. இராசா

(எழுதத் தூண்டியவர் பறை ஆசான் திரு. நிர்மல் அவர்கள்)

No comments: