11/07/2023

நட




நடக்க நடக்கத்தான்
இடம்பெயர்தல் நடக்கும்..
நடக்க நடக்கத்தான்
ஞாலம் புலப்படும்....
நடக்க நடக்கத்தான்
ஞானம் வசப்படும்...

அன்று
மனித சமுதாயம் மட்டும்
நடவாமல் நின்றிருந்தால்
இங்கே என்னதான் நடந்திருக்கும்?

எவரெஸ்டை எட்டிய
எட்மண்ட் ஹிலாரியும்
சந்திரனை எட்டிய
ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினும்
நடந்து நடந்துதானே
இலக்கை எட்டினர்...

காந்தி நடந்த நடையைக்
கணக்கிட முடியுமா?
தண்டி யாத்திரையோ
தண்ட யாத்திரையோ...
அவை...
நடப்பவரின் எண்ணம் பொறுத்தே..

ராஜசேகர ரெட்டியோ
ராகுல்காந்தியோ?!
வை கோபால் சாமியோ
ஈ வே ராமசாமியோ
எல்லாம்....
நடப்பவரின் திண்ணம் பொறுத்தே...

இங்கே
எந்த உயிரினமும் நம்மைப்போல்
நடக்கத் தாமதிப்பதில்லை...
நாம் மட்டும்தான்
புரள சில மாதம்
தவழ சில மாதம்
அமர சில மாதம்
நிற்க சில மாதம்
நடக்க சில மாதமென்று
நாட்கள் பல எடுத்துக்கொள்கிறோம்

ஆரம்பத்தில் என்னவோ
நன்றாகத்தான் நடந்தோம்
பிறகு நடந்ததென்ன?

அங்கே போகாதே
இங்கே போகாதேயென்று
டிவி கொடுத்தோம்
டேப் கொடுத்தோம்
விளையாட்டை நிறுத்தி
வீடியோகேம் கொடுத்தோம்...
கூடவே...
குண்டான தேகம் கொடுத்தோம்

நாம் மட்டும் என்னவாம்?
அன்று அப்படி இப்படியென்று
நடந்த கதைகளையே பேசிப்பேசி
நடக்கும் தூரத்திற்குக்கூட
வண்டி தேடுகிறோம்...

முடிவு?
மருத்துவமனையில்
சர்க்கரை அளவை சரிபார்க்கிறோம்
அவரோ நடக்கச்சொல்கிறோர்
நாமோ நடக்கும் காரியமா என்றபடி
காரியம் நடக்காமல் இருக்க
உடனே நடக்க நினைக்கிறோம்..
பிறகு நடப்பதென்ன?!

வெயிலென்றும் மழையென்றும்
பனியென்றும் குளிரென்றும்
ஏதேதோ சொல்லிவிட்டு
நடக்க முடியவில்லையென்று
மீண்டும் நடக்கிறோம்
மருத்துவமனைக்கு...

எனில் என்னதான் செய்ய?
சரி....
வாங்க நடப்போம்!

✍️செ. இராசா

No comments: