22/02/2023

எழுத்து

 #எழுத்து


 

மொழியின் இரண்டாம் வடிவம்
ஒலியின் அச்சுப் படிமம்
நாகரிக சமுதாயத்தின் அடையாளம்
கடந்துவந்த பாதையின் கால்தடம்
இனங்களின் முத்திரை
இப்படி....
எழுத்தின் பரிமாணங்கள்தான்
எத்தனை எத்தனை?!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
.....இது வள்ளுவர்
எண் எழுத்து இகழேல்
.....இது ஔவையார்
எண்ணிப் பார்த்தால்
என்ன தோன்றுகிறது?
எண் மட்டுமல்ல
எல்லாமே எழுத்துதான்!

இவ்வளவு ஏன்?

எழுதிவைத்த நூல்களெல்லாம் அழிந்துவிட
என்றும் அழியா தொல்காப்பியத்தின்
முதலாம் அதிகாரமே எழுத்து தானே...

என்னதான் இங்கே
எழுத்தில்லா மொழிகள்
எழுத்தை இரவல் வாங்கினாலும்
எழுதாத வரலாற்றை
யாரும் இரவல் வாங்கமுடியுமா?!

இங்கே...
கண்கள் தெரியாதவர்க்கும்
கண் திறக்க எழுத்துண்டு
ஆனால்;
கண்ணிருந்தும் படிக்காதவர்களின்
தலையெழுத்தை மாற்ற முடியுமா?

இந்த எழுத்துக்கள் கடந்துவந்த
பாதையைப் பாருங்களேன்...

கல்லில் கல்-வெட்டாய்
மண்ணில் மண்பானைக் கீறலாய்
பனையோலை-ஏடுகளாய்
செம்பில் செப்பேடுகளாய்
தோல்
துணி
காகிதப் படிகளேறி
கணினி
கைப்பேசி
இணையமென உச்சியில் இருக்கும்
இந்த எழுத்துகள் வியப்பாக இல்லையா?

இடமிருந்து வலமாய்
வலமிருந்து இடமாய்
முட்டை முட்டையாய்
வளைந்த ஜிலேபியாய்
கட்டிட தோரணமாய்
கச்சித ஆபரணமாய்...
அப்பப்பா....
ஆம்...
இங்கே எழுத்துகள் தினமும்
பிரசவமாகிக்கொண்டே இருக்கின்றன..
ஆனால்...
பிரம்மாக்கள்தான்...
வெறும் சவமாகிக் கொண்டே இருக்கின்றனர்..

இருந்தாலும் எழுதுங்கள்....
எழுத்துகள் உயிர்ப்பிக்கும்....
அந்த இயேசுவைப்போலவே....

✍️செ. இராசா

No comments: