13/02/2023

சொந்தங் கூடும் வீட்டுல சொர்க்கம் வந்து சேருமே..

  


#குடும்பப்_பாடல்

#பல்லவி

சொந்தங் கூடும் வீட்டுல
சொர்க்கம் வந்து சேருமே...
இந்த வீட்டைப் பாருன்னு
ஊருக்குள்ள பேசுமே...

இன்பங் கூடும் வீட்டுலே
என்றும் இல்லை சோகமே
இந்த வீட்டில் யாருன்னு
எட்டியெட்டிப் பார்க்குமே

சின்னச் சின்னக் கூட்டுக்குள்ள
செய்யும் அன்புச் சேட்டையில
கண்ணைக் கட்டும் சோகம்கூட
கான லெனப் போகுமே...

#சரணம்_1 (தேர்வுக்குட்பட்டது)

கண்ணிமைக்கும் நேரங்கூட
கண்ணைவிட்டுப் போனதில்லை...
உங்களைப்போல் தெய்வம் இல்லையே...

செல்லம் தங்கம் ராசாவென்று
கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிட்ட
காட்சி ஏதும் மறக்கவில்லையே.....

முட்டி முட்டி படிக்கும்போதும்
எட்டிடாத மதிப்பெண் கண்டு
திட்டும் சொல்லில் கோபமில்லையே...

கேட்டதெல்லாம் வாங்கிவந்து
சொல்லாமலே காட்டுகின்ற
பாசத்துக்கும் எல்லை இல்லையே....

தப்பு செஞ்சு நிக்கும்போது
ஓங்கி ஒன்னு வக்கிம்போது
உங்க கண்ணில் வெள்ளம் பொங்குமே...

ஓடி ஆடித் திரியும்போது
காயம் பட்ட தென்றால்போதும்
உங்க நெஞ்சில் ரத்தம் சிந்துமே...

கொல்லுகின்ற சோகமிருந்தும்
சொல்லும் சொல்லில் காட்டிடாத
அன்பு கொண்ட ஆசான் நீங்களே....

வெல்லுகின்ற வேகமிருந்தும்
வேண்டுமென்றே விட்டுத்தந்த
வேசம் போடா நண்பன் நீங்களே....

*LONG METER*

நூறு கோடி வச்சிருந்தாலும்
சொந்தம் பந்தம் இல்லையினா
என்னைக்குமே ஏழை தானடா...

ஆயிரந்தான் உறவிருந்தாலும்
ஆன சொந்தம் இல்லையினா
உண்மையிலே எல்லாம் வீணடா...

#சரணம்_2 (தேர்வுக்குட்பட்டது)

மொட்டமாடி நிலாச்சோறு
ஊரு-கம்மாய் கெளுத்திமீனு
நாக்கிலின்னும் வாசம் போகலையே...

காலிபாட்டில் பொறுக்கிவச்சு
ஐஸுவண்டிக் கெல்லாம்போட்டு
திங்கும்ஐஸின் கூலிங் தீரலையே...

பைக்குவரும் சப்தங் கேட்டே
அப்பாவென்று ஓட்டமோடி
புத்தகத்த கையில் வச்சோமே

தாத்தாசொல்லும் மொக்கை ஜோக்கும்
செம்மசெம்ம வென்றேசொல்ல
உண்மையிலே சிரிப்பு வந்திடுமே..

ஆட்டுக்குட்டி அறுக்கும்போது
பாவமென்று சொன்ன வாயில்
நல்லிபோயி உச்சுக்கொட்டிடுமே...

சுருட்டிவச்ச பேப்பர்நுனியில்
வத்திப்பொட்டி பத்திவச்சு
சிகரெட்போல குடிச்சுபார்த்தோமே..

அரும்புமீசை அரும்புபோதில்
பெரியமீசைக் காசப்பட்டு
ஷேவிங்பண்ண பிளேடு வெட்டுமே...

சாமியாடும் ஐயாபார்த்து
கூட்டமில்லா நேரம்பார்த்து
ஆசைவச்ச தெல்லாம் கேட்டமே...

*LONG METER*

ஊரு பூரா சுத்திவந்தாலும்
உண்மைச் சொந்தம் இல்லையினா
என்ன இங்கே உண்டு சொல்லடா

பேரு பெற்ற ஆளுயென்றாலும்
பெண்டு பிள்ளை இல்லையினா
என்ன வாழ்க்கை எல்லாம் பொய்யடா

#கூடுதல்_வரிகள்

தாயின் அன்புக் கீடே இல்லை
தந்தை போலத் தோழன் இல்லை
பாரம் தாங்கும் பூமி நீங்களே...

மேகத்திற்கு பேதம் இல்லை
தூரும் நீரில் வர்ணம் இல்லை
பாசம் கொட்டும் வானம் நீங்களே...

என்ன தவமோ என்றைக்கு செய்தோமா...
அந்தப் பலனை இன்றைக்கு பெற்றோமோ....
உம்மைப் போல யாருமில்லையே
உம்மை விட்டா நாங்க இல்லையே

✍️செ. இராசா

No comments: