20/10/2021

எங்கே போகிறோம்?




நான் கத்தார் வந்த புதிதில் ஓர் ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். பொதுவாக ஜப்பானியர்கள் மிகவும் கடினமான உழைப்பாளிகள். எப்போதும் வேலை வேலை என்றே இருப்பார்கள். அவர்கள் அப்படி இருப்பதால் மற்றவர்களையும் அப்படியே எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் வேலை ரீதியாக நல்ல பேர் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களுடைய ஒரே பிரச்சினை அவர்கள் வாயில் அவ்வளவு எளிதாக ஆங்கிலம் வராது என்பது மட்டுமே.

அந்த நிறுவனத்தில் தொகாசி என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் என்னுடன் ஆங்கிலம் பேசுவதில் மிகவும் ஈடுபாடு காட்டுவார் (நம்மளையும் ஒருத்தர் நம்பி.....ஹைய்யோ ..ஹைய்யோ) அப்படி என்னுடன் என்வீட்டில் பேச ஒன்பது மணிக்கு வருவதாகக் கூறினார். நானும் சரி என்று சம்மதித்தேன். ஒரு ஏழு மணி அளவில் என்னை கைப்பேசியில் அழைத்து, ராஜா மன்னிக்கவும், என்னால் ஒன்பது மணிக்கு வரமுடியாது. ஒன்பது ஐந்திற்குத்தான் வரமுடியும் என்று சொன்னார் பாருங்கள். அடப்பாவிங்களா ஐந்து நிமிடத்திற்கு இத்தனை வருத்தமா? அப்போது உணர்ந்தேன் அவர்கள் காலத்திற்குத் தரும் மதிப்பை.

பொதுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் நேரத்தை மதிப்பார்கள். ஒரு கடையில்கூட சொன்ன நேரத்தில் பொருள் வரவில்லையென்றால் இரணகளமாக்கி விடுவார்கள். இங்கே இருக்கும் வரை இப்படியே பழகியவர்கள் ஒரு மாத விடுமுறையில் ஊர் போகும்போதுதான் நிறைய இழுத்தடிப்பு அனுபவங்களை அடையும்போது மிகவும் நொந்து நூடுல்ஸாகி விடுகிறார்கள்.

ஆம் நண்பர்களே....அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல, தனியார் வேலையாட்களான கொத்தனார், ஆசாரி, பிளம்பர், எலெட்ரீஷியன்........ தொடங்கி பெரு சிறு கடைகள் மட்டுமல்லாமல் கலைத்துறைவரை பெரும்பாலும் அனைவருமே நேரத்தையும் வாக்கையும் அலட்சியம் செய்பவர்களே என்பது வேதனையான உண்மையே. சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலும் யாருக்குமே இல்லை. "இந்தா செஞ்சிருவோம் அண்ணா...."என்கிற வார்த்தைதான் எப்போதும் பதிலாக வருகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் இங்கே நான் அடுக்குவதாக இருந்தால் அது புதினம்போல் நீண்டுவிடும் என்பதால் அதைத்தவிர்க்கின்றேன். "#கற்பெனப்படுவது_சொல்_திறம்பாமை" என்கிற ஔவையின் வாக்கை அறிந்தால் நம் சமூகம் இப்படி மாறி இருக்குமா?! உண்மையில் மிகுந்த வேதனையுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

செ. இராசமாணிக்கம்

No comments: