18/09/2023

எதிரியை வாழ்த்துங்கள்...

 எதிரெதிர் கருத்திருந்தால்
எதிரியென்ற அர்த்தமில்லை..
எதிரொலி வருகுதென்றால்
எதிர்ப்பென்றும் அர்த்தமில்லை..

இங்கே ..
வடக்கென்ற ஒன்றிருந்தால்
தெற்கென்ற ஒன்று இருக்கவே
செய்யும்
இதுவொன்றும் அரசியல் அல்ல
அறிவியல்...

இன்று சரியெனத் தோன்றுவது
நாளை தவறாகலாம்
இன்று தவறெனத் தோன்றுவது
நாளை சரியாகலாம்..
ஆக..
எதிர் நிலைப்பாடெல்லாம்
எதிரி நிலைப்பாடாய் அர்த்தமாகாது..
அப்படி ஆகுமெனில்
நமக்கு நாமே எதிரிதானே...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

நம் கருத்தை
நாமே மறுதலிக்கவும்
தைரியம் வேண்டும்
இதைச் சொன்னவர் ஓஷோ...

இங்கே...
நாம் எதிரியாக நினையாவிட்டாலும்
நம்மை எதிரியாக நினைப்போரும்
இருக்கத்தானே செய்கிறார்கள்..
உண்மைதான்...
ஆனால்...
ஆதரிப்போரின் சொல்லைவிட
எதிர்ப்போரின் சொல்லில்தானே
எரிபொருள் உள்ளது....
எனில்...
‌எதிரிகளும் மறைமுக
நண்பர்கள்தானே?!

உண்மைதான்...
ஆனால்‌‌....
எதிரிகள்தரும் இன்னல்களை
எப்படி ஏற்பது?!
பகைவர்கள்தரும் பக்கவிளைவை
எப்படி பொறுப்பது?

தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதுவும் தெரியும் தானே?
ஆனால்
தீதுசெய்யாப் போதும்
தீது வருதென்றால்
யாதுரைப்பது?!

எனில்...அது
இன்றைய புதுக் கணக்கல்ல
நேற்றைய பழைய கணக்கே....
ஆம்...
கழிவதைக் கவனியுங்கள்
அழுவதை நிறுத்துங்கள்
எதிர்ப்பிலே நீந்துங்கள்
எதிரியை வாழ்த்துங்கள்...

வாழ்க வளமுடன்!

✍️செ இராசா

No comments: