14/11/2022

ஔவைத் திங்கள்-16 ---- இயல்பில் திரியாமை

 


 #ஔவைத்_திங்கள்__16
#இயல்பில்_திரியாமை

இயல்பில் திரியாமல் எப்போதும் நின்றால்
இயற்கையே கைகொடுக்கும் ஏறு!
(1)

பட்டென்று கொத்துகின்ற பாம்பின் குணமுள்ளோர்
சட்டென்று கொத்திடுவர் சாய்ந்து!
(2)

நாயைக் குளிப்பாட்டி நல்லுணவு போட்டாலும்
வாயைத் திமிறிவரும் நாக்கு!
(3)

குணங்கெட்ட சாத்தான்கள் குன்றேறும் என்றால்
கணங்கூட நிற்பதில்லைக் காண்!
(4)

கெடுகின்ற பாலில் கெடாதநெய் போல்தான்
கெடுதலிலும் நன்றுண்டு கேள்!
(5)

நட்பின் அளவுகோல் நாட்கள் பொறுத்தில்லை
நட்பின் நடப்பில்தான் நட்பு!
(6)

செய்ததை எல்லாம் சிறிதும் நினையாமல்
செய்ததென்ன என்பர் சிலர்?
(7)

பணம்வந்த பின்னே பழகிய நட்பின்
குணம்மாறும் என்றால் குறை!
(8.)

பாலைத் திரிக்கும் பழச்சாறின் ஓர்துளிபோல்
காலைக் கவிழ்த்துவிடும் காழ்ப்பு!
(9)

நல்ல குணவானும் நாட்களின் ஓட்டத்தில்
பொல்லானாய் மாறலாம் போக்கு!
(10)

✍️செ. இராசா

No comments: