07/11/2022

ஔவைத் திங்கள் 15 --- தலைப்பு: அப்பா (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை)

 




அப்பாவின் பின்சென்றால் அப்பாவின் அப்பாவாய்
அப்பப்பா எத்தனைபேர் ஆய்?
(1)

ஆதியப்பா யாரப்பா? ஆராய்ந்து காணப்பா..
போதியப்பா... பின்னே புகழ்ந்து!
(2)

தந்தையின் தந்தையார் தந்தநல் விந்தைத்தான்
வந்தபின் தூவுகிறோம் வாழ்ந்து!
(3)

தொடரோட்டம் போலே தொடர்கின்ற பந்தம்
கடந்துவந்தத் தூரத்தைக் காண்!
(4)

உயிரணுவின் உள்ளே உறைந்திருக்கும் ஜீனால்
உயிர்ப்பிக்கும் ஆதி உரு!
(5)

தாயுறவு சத்தியம்! தந்தையுறவு நம்பிக்கை!
ஆயுளை நீட்டிக்கும் அன்பு!
(6)

அப்பாசொல் மந்திரமா? ஆராய வேண்டாமா?!
தப்பென்றால் மட்டும் தவிர்!
(7)

தப்பாகத் தோன்றுவது தப்பில்லை என்றானால்
அப்பாசொல் குத்தும் அறி!
(8.)

அப்பாவாய் அம்மாவாய் ஆனால்தான் நன்கறிவார்
அப்பா-யார்? அம்மா-யார்? என்று!
(9)

அப்பா குரலொன்றே ஆத்மபலம் என்றறிந்தோர்
அப்பாவைப் போற்றுகின்றார் ஆழ்ந்து!
(10)

✍️செ. இராசா

No comments: