06/01/2021

பாஞ்சாலி திரௌபதி (ஐவரை மணந்தவள் ஆவாரா பத்தினி?!)



ஐயம் தீர்த்திடவே
அடியேன் நான் முயல்கின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடி காட்ட வேண்டுகிறேன்- தத்தம்
அடிகாட்ட வேண்டுகின்றேன்

துரோணரைப் பலி தீர்க்க
துருபதன் வளர்த்த வேள்வி
வானை முட்டியதில்
வானவரும் கொந்தளிக்க
விரும்பிய பிறப்பாக
திருஷ்ட தியூமனும்
விரும்பாத பிறப்பாகக்
கிருஷ்ணை திரௌபதியும்
ஒன்றன்பின் ஒன்றாக
அன்னையின்றி வெளிவந்தார்!

முதலில் ஏற்காத
முட்டாள் துருபதனும்
நெருப்புக் கன்னிக்குப்
பொறுப்பான தந்தையானார்!

குழந்தைப் பருவமில்லாக்
குமரிக் குழந்தைக்கு
சுயவரம் நடத்திவைக்க
சுற்றத்தை வரவேற்றார்!

வில்வித்தைப் போட்டியிலே
எல்லோரும் பங்கேற்க
விஜயனாம் அர்ச்சுனனே
வெற்றியினைப் பெறுகின்றார்!

பெற்ற பரிசேந்தி
பெற்றவளாம் குந்தியினை
வெற்றித் திருமகனும்
வேகமாய் நாடிவர
என்ன ஏதேன்றே
ஏறெடுத்தும் பாராமல்
பெற்றதைப் பகிர்ந்தளிக்க
பெற்றவளும் சொல்லிவிட
ஐவரோடு ஒருவராய்
அனைவரும் அதிர்ச்சியுற்றார்!!!
அறுவரோடு சேர்ந்தங்கே
அன்னையும் அதிர்ச்சியுற்றார்!!!

என்ன செய்வதென
எண்ணுகிற அவ்வேளை
வேதவியாச முனி
விடைசொல்ல விஜயமானார்!

பிறவிப் பெருந்தளையால்
பிறக்கின்ற மற்றோர்முன்
இறையின் அருட்கலையாய்
இறங்கி வந்த பாஞ்சாலி
குணவான்கள் ஐவருக்கும்
மணவாட்டி ஆனாலும்
நெருப்பிலே குளித்தபின்தான்
நெருங்கிடுவாள் அடுத்தவரை..
பரிசுத்த தீயாலே
பந்தத்தை அழித்துவிட்டு
கற்புநெறிக் கன்னிகையாய்
கச்சிதமாய்த் திரும்பிடுவாள்...

பிறப்பின் இரகசியத்தை
பெரியவர் இயம்பியதும்
அறத்தின் காவலர்கள்
ஐவரையும் கைப்பிடித்தாள்!
அக்னிப் பத்தினியாள்
அறத்தோடு கை கோர்த்தாள்!
அரக்கர் கூட்டத்தைத்
அழிக்கின்ற தீயானாள்!

No comments: