16/01/2017

தவறான புரிதல்


நான் யாரென நானே அறியலையே
நான் யாரென நீயுரைத்தாய் அதுசரியோ?

நின்கூற்றே மெய்யேயென
நீ கதைப்பாய் அதுசரியோ?

உண்மையதை உணர்ந்தாலே
உதிர்ப்பாயோ அனல் வார்த்தை?

நீர் செல்லும் இடமெல்லாம்
நிறம் மாறும் தன்மையென
நீ யெனை நினைத்தாயோ?!
நீரின் குணம் என்னவென்று
நீதானதை யறியலையோ?!

உச்சியிலே உதயமாகி
ஒருவழியாய் ஓடிபின்னே
பலவழியாய் பாதைமாறி
பள்ளதிலே தடுமாறி
படுகுழுயில் வீழ்ந்தாலும்
பக்குவமாயதைத் தாண்டி அப்
பரந்தாமன் கருணை ஆழிப்
பாதம் தொடும் நாழி தனை
பலநாளாய் எண்ணி எண்ணி
பக்தியோடு வேண்டுகின்றேன்
நான் அறிவேன் யாமவன்
நாய் அடியேன் என

எமையறியும் எண்ணம் விட்டு
உமையறியும் உள்ளம் கொண்டால்
உண்மைதனை உணர்ந்திடுவாய்
உயர்வழியில் சென்றிடுவாய்

No comments: