06/10/2023

எது சரி? எது தவறு?

 


எது சரி? எது தவறு?

இங்கே....
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
சில மதத்தின் வாழ்வியலென்றால்
ஒருவருக்கு பலரென்பதும்
சில மதங்களில் வாழ்வியலே...

கள்ளுண்ணான்மை சரி என்பது
ஒரு மறை சார்ந்த விளக்கமென்றால்
ஒயினை மட்டும் சரி என்பதும்
ஒரு முறை சார்ந்த வழக்கமே‌....

இங்கே...
பன்றிக்கறியைத் தவறென்போர்
மாட்டுக்கறியை சரியென்பர்
மாட்டுக்கறியை அச்சச்சோ என்போர்
மரக்கறியை பேஸ்பேஸ் என்பர்

வட்டி வாங்குதல் தவறென்போர்
உயிர்க்கொலையின் வகை சொல்வர்...
உயிர்க்கொலையை தவறென்போர்
வட்டி வாங்கிக் கொலை செய்வர்...

சிலருக்கு அருவ வழிபாடு சரி
சிலருக்கு உருவ வழிபாடு(ம்) சரி
சிலருக்கு இறை வழித் தூதரே சரி
சிலருக்கு தூதர் வழி இறையே சரி

நீயும் அவனும் வேறு வேறு என்றால்
அது த்வைதக் கோட்பாடு..
நீயும் அவனும் ஒன்றே என்றால்
அது அத்வைதக் கோட்பாடு..
இல்லவே இல்லை என்றால்
அது நாத்திகக் கோட்பாடு

இங்கே எது சரி? எது தவறு?

சகுனியின் நீதி என்பது
காந்தாரக் கண் சார்ந்தது
கர்ணனின் நீதி என்பது
சாதிய வாய் சார்ந்தது

இராமனின் நீதி என்பது
சீதைக்குத் தீ வைத்தது..
கண்ணகியின் நீதி என்பது
மதுரைக்கேத் தீ வைத்தது...

இங்கே எது சரி? எது தவறு?

அன்றைய தவறு என்பது
இன்றைய சரியாகலாம்
அந்தக் கலிலியோவின் கூற்றைப்போல...
இன்றைய சரி என்பது
நாளைய தவறாகலாம்
இந்த வாக்காளரின் ஓட்டைப்போல..

ஆமாம்...
எது சரி? எது தவறு?

✍️செ.இராசா

No comments: