03/11/2023

அப்துல்கலாம்

  


ஏ_பீ‌_ஜெ என்கிற
ஆவுல் பக்கீர் ஜெனாலுபுதீன் 

அப்துல்கலாம் அவர்களால்தான்
இந்தியா எழுந்தது!
தென்னகம் தெரிந்தது!
அகிலம் வியந்தது!
ஐநா அதிர்ந்ததென்றால்
இது ஏதோ
உணர்ச்சியால் வெடித்த
உரையென எண்ணாதீர்...
உணர்ந்ததால் வடித்த
உண்மையென உணர்வீர்...

ஆம்;
அதுநாள்வரை இராமேஸ்வரம்
யாத்திரீகர்களுக்கான
புண்ணிய பூமி;
ஆனால் இன்றோ
நாத்திகர்களுக்கும் அதுவே...

காரணம்
மதம் சார்ந்ததால் அல்ல; மண்ணில்
மனிதமும் சேர்ந்ததால்...

முன் நாட்களில் அவர்தான்
செய்தித்தாள்கள் போட்டார்
பின் நாட்களில் அவரைத்தான்
செய்தித்தாள்கள் போட்டன...

அவரொன்றும் சைவரல்ல
ஆனால் சுத்த சைவமவர்..
அவரொன்றும் கலைஞரல்ல
ஆனால் பல்கலைக் கழகமவர்..

பத்மபூஷன்
பத்ம விபூஷன்
பாரத ரத்னாவென
பாரத விருதுகள் எல்லாம்
முதல்முறையாக
பெருமையடையந்தன: ஆம் அது
உரியவரிடம் சேர்ந்ததால்; தகுதி
உடையவரிடம் சேர்ந்ததால்...

அன்று....
கடைக்கோடித் தமிழ் மகனை
முதல்குடிமகனாக்க
டெல்லி தமிழகம் வந்தது
தமிழகம் தலைமை ஏற்றது; ஆம்
தமிழ்-அகம் தலைமை ஏற்றது.
பாரதம் தலை நிமிர்ந்தது!

ஆயுதங்கள் தயாரித்ததால்
அவரொன்றும் மகாத்மாவின் முரணல்ல
வல்லாதிக்கத்தை தடுக்க முடிந்ததால்
அவரும் பரமாத்மாவின் அரணே...
ஆம் அந்த அரனே...

அப்துல் கலாம்
ஓர் அற்புத விளக்கு
அந்த
அலாவுதீனின் விளக்கைப்போல
அல்ல அல்ல..
அதையும் விஞ்சிய அற்புத விளக்கு

கைகள் தேய்க்காமலே
கைகொடுத்த விளக்கு..
அவர்...
ஜின் இல்லாமலே வந்த ஜென்
வுமன் இல்லாமலே வாழ்ந்த மேன்

மாணாக்கர் முன் ஏணியவர்
ஞானாசிரியர் முன் ஞானியவர்
குர்ரான் ஓதிய குரல் அவர்
குறள் மறவாப் புகழ் அவர்

ஏவுகணையின் தந்தை
ஈவோடணைத்த தாய்
தனித்துவம் கொண்ட சரித்திரம்
தமிழ்த்தவம் தந்த சமத்துவம்
அப்துல் கலாம்;
அவர்பற்றி
இன்னும் கூறலாம்
இதற்கு மேலும் கூறலாம்
இருப்பினும்...
இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்!
இதயத்தில் நிறுத்திக் கொள்ளலாம்!
வாழ்க கலாம்!
வாழ்க கலாம்!
வைப்பீர் சலாம்!
வைப்பீர் சலாம்!

வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

No comments: