30/04/2024

இலக்கு நோக்கிப் போகையில....

இலக்கு நோக்கிப் போகையில
இழப்பு ரொம்ப இருக்குது- ஆனால்
இறுதிவரைப் போகும் போதே
இறைவன் மகிமைப் புரியுது

கடனவுடன வாங்கி வாங்கி
வாழும் வாழ்க்கை எதுக்குங்க?
கடமைகள உதறி ஒதுங்கி
வாழ்ந்து என்ன இலாபங்க?

ஒரேவீட்டில் வாழும் போதும்
உறவில் எதுக்கு பிணக்குங்க?
ஒரேமண்ணில் வீழும் போது
வருவ தென்ன சொல்லுங்க?

✍️செ. இராசா

29/04/2024

பொண்டாட்டி வெண்பாக்கள்



கேள்வி
பொண்டாட்டி போன்செஞ்சா பொய்பொய்யாச் சொல்றீரே
உண்மையில்நீர் ஆம்பளையா ஓய்!
(1)
 

பதில்கள்
கல்யாணம் பண்ணாம கண்டபடி பேசாதே
சொல்லிப் புரியாது சூடு!
(2)

என்னங்க என்றவுடன்..என்னடி என்றழைத்தால்
என்னகுரல் மாறுதென்பாள் இங்கு!
(3)

என்னங்க என்றாலும் இம்மென நின்றாலோ
என்னசரக் கென்பாள் இடித்து!
(4)

நின்னாலும் குத்தம்பாள் நேருக்கு நேர்நின்று
சொன்னாலும் குத்தம்பாள் சூழ்ந்து!
(5)

எப்போதோ சொன்னதை இப்போதும் சொல்லிடுவா
எப்போதும் சொல்லிடுவா இங்கு!
(6)

எவ்வளவு செஞ்சாலும் என்னத்த செஞ்சேம்பாள்
அவ்வளவே வாழ்க்கை அறி!
(7)

வாழ்க்கையே போச்சும்பாள்... வாய்கிழிய பேசிடுவாள்
தாழ்ந்துதான் போவீர் தனித்து!
(8)

ஊரே வியந்தாலும் உன்பேச்சக் கேட்காமல்
நேரே மொழிந்திடுவாள் நின்று!
(9)
 

தீர்வு
ஆனாலும் தப்பில்லை அப்படித்தான் இல்வாழ்க்கை
தேனாகும் பின்நாளில் சேர்ந்து!
(10)

✍️செ. இராசா

25/04/2024

எந்தன் தேவதையே.......

பல்லவி
எந்தன் தேவதையே- என்
நெஞ்சில் தீமலையே
கொஞ்சம் பாரெனையே- அடி
கொட்டும் மாமழையே..

காதல் தீயைப் பற்றவிட்டு
காட்சிப் பிழையென சொல்வாயோ?!
மாயை நோயில் சிக்கவைத்து
மருந்தைப் பூட்டி வைப்பாயோ?

என்ன இது...என்ன இது?
எண்ணமெல்லாம் உன் நினைவே...
வந்து விடு...வந்து விடு..
மின்னிடலாம் வா(ன்) நிலவே....


சரணம்
மனதை வாட்டும் மாலையே
காதல் உந்தன் தோழியா?!
உயிரை நீக்கும் காலனே?
நீயும் கூட நண்பனா?!

தானே நானே புலம்புறேன்
எனக்கு ஒன்னும் புரியலை
தேடி தேடித் திரியிறேன்
உனக்கு மட்டும் தெரியலை

காதல் படுத்துற பாடிருக்கே- ஐயோ
கானல் நீருக்குள்ள மீனைப்போல..
காதல் கொடுக்குற பாட்டிருக்கே- அது
நாளும் நிக்குமந்த வானைப்போல...

வந்துவிடு பெண்ணே வந்துவிடு
தந்துவிடு உன்னைத் தந்துவிடு
உன்னோடு நானாக
என்னோடு நீயாக ஒன்றிப் போகலாம்......

✍️செ. இராசா

24/04/2024

கஞ்சி -3



 


பழைய கஞ்சிதான்
அதிகமாய் இருக்கிறது
விலை
(1)
 
கெஞ்சியன்று கேட்டாலும் கேட்காத நாமதான்
கஞ்சிதிங்க தாரோம்பார் காசு!
(2)
 
உணவாயினும் மருந்தாகவே
.....உருவாக்கியே உண்டோம்!
மணம்யாவிலும் விருந்தாகவே
......வகைகூட்டியே தந்தோம்!
பணம்தேடியே பலகாலமாய்
........பலவூர்பல சென்றே
கணம்யாவிலும் நினைவாலினி
.......கதைத்தேஉண வுண்போம்!
(3)
 
✍️செ. இராசா

22/04/2024

பிறப்பிலே தாழ்ந்தவர் எவருமே இல்லை

 பிறப்பிலே தாழ்ந்தவர்
.....எவருமே இல்லை!
இறப்பினை வென்றவர்
.....இதுவரை இல்லை!
உறவினர் யாவரும்
.....உதவுதல் இல்லை
உறவுபோல் நட்புகள்
....உதறுவ தில்லை!

கடவுளைக் கண்டவர்
....கதைப்பதே இல்லை!
கடவுளை மறுப்பவர்
....கதைப்பது தொல்லை!
கடமையைச் செய்பவர்
....கலங்குவ தில்லை!
கடமையைத் தவிர்ப்பவர்
....கணக்கிடப் பிள்ளை!

✍️செ. இராசா

19/04/2024

மன்னிப்பு வெண்பாக்கள்

பிறர்செய்த குற்றம் பெருந்துயர் தந்தால்
மறத்தல்தான் மாற்று(ம்) மருந்து!
(1)

அறியாப் பிழைபொறுத்த ஆண்டவரை எண்ணி
அறியார் பிழைபொறுப்பீர் ஆய்ந்து!
(2)

தூக்கிச் சுமப்பதினால் துன்பம் விளையுமெனில்
தூக்கி எறிதல் சுகம்!
(3)

மன்னிக்கும் போதெல்லாம் மாமனிதர் ஆவதினால்
மன்னிக்கக் கற்பீர் மகிழ்ந்து!
(4)

பொறுமையின் எல்லையாய் போட்டதார் கோடு?
பொறுத்தார்க்கே கிட்டும் புகழ்
(5)

சினத்தோடு கொட்டும் சிலபல சொற்கள்
மனதிற்குள் சென்றால் வடு
(6)

சினமும் கவலையும் சிக்கலைக் கூட்டி
மனிதநிலை தாழ்த்தும் வலிந்து
(7)

வினைப்பதிவு போனதென்று விட்டுவிட்டு வந்தால்
அனைத்தையும் பார்ப்பான் அவன்
(8)

என்ன முயன்றும் இயலவில்லை என்றானால்
நெஞ்சார வாழ்த்துங்கள் நேர்ந்து!
(9)

சட்டத்தை முன்வைத்து தண்டனை தந்தாலும்
இட்டமுடன் மன்னிப்பீர் ஏற்று!
(10)

✍️செ. இராசா


18/04/2024

அடிக்கும் பறையொலி

 


அடிக்கும் பறையொலி
துடிக்கும் துடும்பொலி
வெடிக்கும் விசிலொலி கேளு- நீ
வெடிக்கும் விசிலொலி கேளு- ஏய்

அரங்கமே அதிருது பாரு- நாம்
அடிச்சது புது வரலாறு- இந்த
அகிலமே அசருது பாரு- நாம்
படைச்சது புது வரலாறு...

✍️செ. இராசா

10/04/2024

பிறந்தநாள் வாழ்த்துகள்

 


மெய்ஞானம் பெற்றிங்கே
....மேன்மேலும் வாழ்ந்திடவும்
பொய்மாயை இல்லாமல்
....போகட்டும்- மெய்யருளால்
சுற்றத்தார் சூழ
....சுகம்பல கூடியிங்கே
நற்றமிழ்போல் வாழயெம்
.....வாழ்த்து!
 
✍️செ. இராசா
 
இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி 🎉

09/04/2024

மன்னிப்பு

அஃறிணைக்குத் திரும்பாமல்
உயர்திணைக்கே உயர்த்தும்
ஏணிப்படி..

சினத்தால் சிதையாமல்
சிரிப்பால் ஆற்றிவிடும்
மருந்து..‌

கவலையெனப் பதறாமல்
கழிந்ததென அமைதிதரும்
கழிவு..

வஞ்சத்தை வளரவிடாமல்
நஞ்சென அறுத்தெறியும்
கத்தி..

சிலுவையில் அறைந்தாலும்
பாவிகளுக்காய் வருந்தும்
கடவுள்..

ஆம்...
மன்னித்துப்பார்
நீயும் கடவுளாவாய்....!!!

✍️செ. இராசா

06/04/2024

காத்திருந்து கச்சிதமாய்

 


 

காத்திருந்து கச்சிதமாய்க்
......கவ்வுகின்ற கொக்கைப்போல்
நேர்த்தியுடன் காத்திருந்தால்
......வெற்றிபெறல்- சாத்தியமே
எண்ணுகின்ற எண்ணம்போல்
......எல்லாமும் கிட்டுவதால்
திண்ணமுடன் ஒன்றியதைத்
......தேடு

✍️செ. இராசா