முதல் நாள், முதல் வேலை. என் பதவி 'தரக்கட்டுப்பாடு பொறியாளர்' (QC Engineer). ஆனால், வேலை என்னவென்றால், நீள நீளமான இரும்பு உத்திரங்களை (Steel Girders/I-beams) அளந்து, அதன் நீளத்தைப் பதிவு செய்வது. அஸ்ஸாமில் மிகப்பெரிய ஆலை ஒன்றின் கட்டுமானத்தில் முக்கியப் பங்காற்றிய எனக்கு, இந்த வேலை மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. சரி, வந்த இடத்திற்காகச் செய்வோம் என்று இறங்கினால், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. "உதவிக்கு ஆட்கள் வேண்டும்" என்று கேட்டதற்கு, "அதெல்லாம் தனியாக ஆட்கள் தரமுடியாது, நீயே கையுறை மாட்டிக்கொண்டு வேலையைச் செய்" என்று கூறிவிட்டார்கள். 'மதுரைக்கு வந்த சோதனை' என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
மதியம் வரை அந்த வெயிலில் வேலை செய்துவிட்டு, மற்றவர்களோடு சேர்ந்து ஒரு சிறிய கடையில் மதிய உணவிற்கு நின்றேன். கொளுத்தும் வெயிலில், அந்த மஞ்சள் நிற மீன் குழம்பு கலந்த மட்டையரிசி சாதத்தைச் சாப்பிடும்போது தொண்டையை அடைத்தது; குமட்டிக்கொண்டு வந்தது. எப்படியோ அதை உள்ளே தள்ளிவிட்டு, மீண்டும் அதே வெயிலில் மாலை ஐந்து மணி வரை வேலை செய்தேன். 12 மணி நேர வேலை முடிந்து அறைக்குத் திரும்பினால், கண்ணன் சார் மீண்டும் அலுவலகம் வரச் சொன்னார். அழுகையை அடக்கிக்கொண்டு, "சார், இதற்காகவா என்னை அழைத்து வந்தீர்கள்? தயவுகூர்ந்து வேறு ஏதாவது வேலை பாருங்கள்" என்று முறையிட்டேன். நான் வந்தது பிஸினஸ் விசாவில் என்று அப்போது எனக்குத் தெரியாது. என் கோரிக்கையை ஏற்று, அவர் வேறு வேலை பார்ப்பதாகச் சம்மதித்தார்.
அங்கிருந்தபடியே வேறொரு வேலைக்கு நேர்முகத்தேர்வு சென்றேன். அது ஒரு அருமையான கட்டிட மேற்பார்வை வேலை. அந்தப் புதிய முதலாளிக்கு என்னைப் பிடித்துவிட்டது. சம்பளம் 2000 ரியால் (அப்போது இந்திய மதிப்பில் சுமார் 40,000 ரூபாய்). சரி என்று அறைக்கு வந்தால், அருகில் இருந்த பார்மஸியில் பணிபுரியும், நான் படித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு அண்ணா, "ஏன் இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டாய்? கொஞ்சம் பொறு, நான் சிபாரிசு செய்கிறேன்" என்று ஒரு தமிழ் நிறுவனத்தின் எண்ணைக் கொடுத்தார்.
அந்த நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு சென்றேன். அவர்களுக்கும் என்னைப் பிடித்துவிட்டது. சம்பளம் 5000 ரியால். ஆனால், "வேலை தொடங்கச் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்" என்றார். ஒன்றும் புரியவில்லை. பெரியப்பா உட்பட அனைவரும் காத்திருந்தோம். ஒரு மாதம் கழித்து, "விசா கிடைக்கவில்லை" என்று பதில் வந்தது. (இலங்கை பொறியாளரை நீக்கிவிட்டு என்னை எடுப்பதாகத் திட்டம், ஆனால் இந்தியர்களுக்கு அப்போது விசா சிக்கல் இருந்ததாம்). கடவுளே என்று மீண்டும் அந்த 2000 ரியால் வேலைக்குச் சென்றால், "ஏன் இவ்வளவு தாமதம்? இதோ, அந்த இடத்திற்கு வேறொருவரை எடுத்துவிட்டோம்" என்று என் அறையிலிருந்த ஒரு நபரைச் சுட்டிக்காட்டினார்கள். "சார், இதை நேற்றே தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே?" என்றேன். "நீ மட்டும் உடனே கூறினாயா? என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார். தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அறைக்குச் சென்றால், அடுத்த அதிர்ச்சி! வேலை செய்யாமல் சும்மா அறையில் இருக்க யார்தான் சம்மதிப்பார்கள்? அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள்.
என்னை எங்கே வைப்பது என்று பெரியப்பா குழம்பிப் போனார். அவர் தங்கியிருந்த கத்தாரி வீட்டின் அறையில் ஏற்கனவே பல வேலையாட்கள் இருந்தனர். பிறகு, லக்தாவில் ஒரு அரபி வீட்டில் பணிபுரியும் எங்கள் ஊர்க்காரர் ஆறுமுகம் அண்ணா, அரபிக்குத் தெரியாமல் என்னை அவர் அறையில் தங்க வைத்தார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டுக்கொண்டு, அங்கிருந்து வேலை தேடினேன். 17 நிறுவனங்களுக்கு மேல் சென்றேன்; ஒன்றும் கிடைக்கவில்லை.
புகழ்பெற்ற தமிழர்கள் நடத்தும் ஒரு நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வு போனேன். ரமேஷ் என்னும் மலையாளி, "ஏன் இந்தியாவில் வேலை பார்க்காமல் இங்கே வந்தாய்? ஏன் CV-ல் கையெழுத்துப் போடவில்லை?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். பொறுமையிழந்த நான், "சார், வேலை இருந்தால் கொடுங்கள், இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். இப்படி வேண்டுமென்றே கேட்டுத் துன்புறுத்தாதீர்கள்" என்று மிரட்டும் தொனியில் பேசிவிட்டு வந்துவிட்டேன்.
ஒவ்வொரு நிமிடமும் நரகமாக நகர்ந்தது. கையில் காசு இல்லை. அப்போதெல்லாம் செல்போனும் கிடையாது. பூத்தில் இருந்துதான் பேசவேண்டும். பெரியப்பா கொடுத்த பணத்தில் வீட்டிற்கு அழைத்துப் பேசினால், அப்பா பயங்கரமாகத் திட்டினார். "வேலை கிடைக்கவில்லை" என்று சொன்னதற்கு, "கக்கூஸ் கழுவுற வேலையா இருந்தாலும் பார், ஊருக்கு மட்டும் வந்து விடாதே. நீ வந்தால் எனக்கு அசிங்கம்" என்று ஊரைப் பற்றியே கவலைப்பட்டார். "அப்பா, நான் ஏமாந்துவிட்டேன், என்னைக் கொஞ்சம் நம்புங்கள்" என்று கெஞ்சினேன். "செத்தாலும் அங்கேயே செத்துவிடு, இங்கே வந்துவிடாதே" என்று போனைத் துண்டித்துவிட்டார்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
No comments:
Post a Comment