முதல் வெளிநாட்டுப் பயணம், நான்கு மாதங்களைக் கூட முடிக்காமல் மீண்டும் திரும்பும் ஒருவனுடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை நான் விளக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். வாய் வெந்துபோய், முகம் பொலிவில்லாமல், 'அப்பா என்ன சொல்வாரோ' என்கிற பயத்தோடு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்தேன். என்னுடன் பயணித்த பயணிகள் அனைவரும் தங்கள் பிரிந்த குடும்பத்தைப் பார்க்கும் குதூகலத்துடன் இருக்க, நான் மட்டும் சோகத்தோடு திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். என்னை ஏற்றிவிடும்போது திருவிழாக் கூட்டம்போல் வந்த உறவினர்கள் யாரும், நான் திரும்பி வரும்போது வரவில்லை. என் தம்பி சதீஷும், எங்க ஊர் ராசுவும் மட்டுமே வந்திருந்தார்கள். வரும்போது காரில் வந்த நான், திரும்பும்போது பெட்டியைத் தலையில் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாப் தேடி நடந்தேன்.
ராசுவும் சதீஷும் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அவ்வளவு கவலையிலும், "என்ன அண்ணே... சரக்குலாம் இல்லையா?" என்று அவன் அடித்த நகைச்சுவை, பல நாட்களுக்குப் பிறகு என்னைச் சிரிக்க வைத்தது. இருப்பினும், நேரடியாக வீட்டிற்குப் போகாமல் என்னைப் பாசத்தோடு வளர்த்த என் அம்மாச்சியைப் பார்க்கப் புதுக்கோட்டை சென்றோம். அங்கே மாமாவோடு இருந்த அம்மாச்சி, என்னைப் பார்த்த உடனேயே என் நிலையைப் புரிந்து கொண்டு கதறி அழுதார்கள். இன்று வரையிலும் எனக்காக உண்மையில் கண்ணீர்விடும் ஜீவன் என்றால், அது அம்மாச்சிதான். நான் அவர்களின் மூத்த பேரன் என்பதாலோ என்னவோ, என் மீது எப்பவுமே பாசம் அதிகம்.
அங்கிருந்து சொந்த ஊரான அம்மன்பட்டிக்கு, மாறி மாறிப் பேருந்து ஏறி வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பா என்னிடம் பேசவே இல்லை; அம்மா மட்டும்தான் அழுதார்கள். இப்படியே 15 நாட்கள் கடந்தன. வீட்டில் எப்போதும் திட்டுகளும் சண்டையுமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுகூட என் மனதில் தோன்றியது. பிறகு யோசித்தேன், 'தற்கொலை என்பது நமக்காக நாம் எடுத்துக்கொள்ளும் சுயநல முடிவு. நாம் ஏன் பிறருக்காகச் சாகக்கூடாது?' என்று தீர்மானித்து, அன்றைய தினமே சில அமைப்புகளில் சேரக்கூட விண்ணப்பித்தேன். ஆனால், வாய்ப்புதான் கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் அஸ்ஸாம் நோக்கிப் பயணமானேன்.அஸ்ஸாம் ஒன்றும் அமைதி பூமி அல்ல. இருப்பினும் இங்கே இருப்பதற்கு அதுமேல் என்றே பயணித்தேன்.அஸ்ஸாமில் மூன்று வருடங்கள் ஓடின. (அஸ்ஸாம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே #அஸ்ஸாமில்_நான் என்று எழுதியுள்ளேன்; எனவே, அதை இங்கே தொடர விரும்பவில்லை).
என்னதான் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேலை பார்த்தாலும், என் குடும்பத் தேவைகள் மட்டும் பூர்த்தியாகவே இல்லை.
எனவே, மீண்டும் 2006-ம் ஆண்டு வாக்கில், வீட்டில் தங்காமல் மதகுபட்டியில் அறை எடுத்து தங்கி, சிங்கப்பூர், மலேசியா என அயல்நாட்டு வேலைகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். எல்லோருக்கும் ஏற்படும் உள்ளூர் அவமானங்களை எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதுபோகட்டும்.
நம் முயற்சிகள் முடியாவிட்டால் வேறு என்ன செய்வோம்? கடவுளை நாடித்தானே செல்வோம்! அப்படி சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வந்தேன். வந்த உடனேயே இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஒன்று, சிங்கப்பூரில் கோவில் ஒன்றில் தங்கி வேலை தேடிக்கொள்ள ஒருவர் சம்மதித்தார். இரண்டாவது, நண்பன் ஏ.பி.எஸ் (APS) மூலம் துபாயில் வேலை இருப்பதாக ஒரு தகவல் வந்தது. விசாரித்ததில், அது துபாய் அல்ல... மீண்டும் அதே கத்தார்! இத்தனை நாடுகள் இருக்கும்போது மீண்டும் கத்தாரா?!! வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இருப்பினும், என்னை அழைத்தவர்கள் விடுவதாக இல்லை.
No comments:
Post a Comment