கரோனா வேகம் உலகையே உலுக்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேலாகக் கிளைண்ட் அலுவலகத்திற்குப் போகாமலே வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ அனைவரும் ஆன்லைனிலேயே பேசி வேலை செய்தது புதிய அனுபவமாக இருந்தது. இருப்பினும், அது குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் மோசமான அனுபவத்தையே கொடுத்தது. அவர்களின் படிப்பில் மதிப்பெண் குறைவதற்கும், கைப்பேசிக்கு அடிமையாகும் சூழலையும் அதுவே உருவாக்கியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தால், ஏழு நாட்கள் ஓட்டல்களில் தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா தொற்று இல்லை என்றால்தான் வீட்டிற்கு வர முடியும் என்கிற விதியும், அதற்கான செலவும் மிக மிக அதிகமாக இருந்ததை எப்படியோ தாங்கிக் கொண்டோம். இந்தச் சூழலில்தான் மேலாளரின் அழைப்பு வந்தது. "ராஜா... ஆட்குறைப்பில் உன்னை முடிந்தவரை காப்பாற்றவே பார்க்கிறோம், ஆனால் மாற்று வேலைகளையும் செய்ய சம்மதமா?" என்றார் (கொஞ்சம் சம்பளமும் குறைப்பதாகச் சொன்னார்கள்; நல்லவேளை, பிறகு குறைக்கவில்லை).
வேறு என்ன செய்வது? சம்மதம் என்றேன். எனக்காக இந்த மேலாளரும் என்னுடைய முதன்மைத் துறையில் (Core field) வேலை கிடைப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தார். ஆனால் காலம் கைகூடவில்லை. முன்னர் சம்பளத்தையும் இருமுறை உயர்த்தியுள்ளார். சலுகைகளையும் கூடவே தந்துள்ளார். அவர் அப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்ல?! சரி என்றேன். அப்படி ஒத்துக்கொண்டது மிகவும் தப்பாகப் போனது. அதைப் பார்ப்பதற்கு முன்பு, இந்தக் கரோனா காலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியான செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன்.
என்னை 2003-ல் வேலைக்கு எடுத்த பெரியகருப்பன் பெரியப்பா, 2021 ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் மரணித்துவிட்டார். 2003-ல் ஏற்பட்ட பயணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் கத்தார் திரும்பி வந்தபோது, ஆரம்பத்தில் என்னோடு பேச மறுத்துவிட்டார். ஆனாலும், நான் திருமணம் செய்து வந்தவுடன் அவர்தான் தந்தை ஸ்தானத்தில் நின்று, வளைகாப்பு முதல் பிரசவம் வரையிலும் துணையாக இருந்து, பையன் பெண் இருவரின் பிறந்த நாள்களிலும் வந்து வாழ்த்தி, அபுஹாமரில் உள்ள வீட்டை அமைத்துக் கொடுத்து, அவ்வப்போது வந்து வீட்டில் உள்ள பிளம்பிங் பிரச்சினைகளைச் சரிசெய்து கொடுத்தென தூணாக இருந்த பெரியப்பாவிற்கும் எனக்கும் ஒரே ஒரு முறை சின்ன வருத்தம் வந்தது என்று நினைக்கிறேன். அதுவும் என் தந்தையார் மூலமாக அவரின் இரண்டாவது மகனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது சம்பந்தமாகத்தான். அதில் யார் மேல் தப்பென்று உண்மையில் தெரியவில்லை; ஆனாலும் பெரியப்பா என்னிடம் அதைக் காட்டிவிட்டார்.
இருப்பினும் அவர் பெரியவர் என்பதால் அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் 'அஹ்மத் மருத்துவமனையில்' கரோனாவால் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வந்தவுடன், அவரைத் தொடர்புகொள்ளத் தொடர்ந்து முயற்சித்தேன்; கிடைக்கவே இல்லை. பிறகு மேலமங்களத்தைச் சேர்ந்த, காரைக்குடியில் வாழும் (மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்) பாஸ்கரன் அண்ணா மூலமாக அவர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டுப் பதறிப்போய், வீட்டில் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் ஓடினேன் (இதை எழுதும்போதே மனம் ஒரு மாதிரி ஆகிறது).
போய் பார்த்தால், ஒரு பெட்டியை இழுத்து "இவரா?" என்றார்கள்; உடைந்து போய்விட்டேன்.
அவருடைய மூத்த மகன் சுந்தரம் அண்ணா, பாஸ்கரன் அண்ணா, நான் என மூன்று பேர்தான் இருந்தோம். சவப்பெட்டியைத் தூக்க நான்கு பேர் வேண்டும். அருகே இருந்த ஓட்டுநரையும் அழைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினோம்.
இங்கே வெளிநாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இடுகாட்டில் புதைக்க ஒதுக்கப்பட்ட இடம் என்பது தோகாவில் இருந்து துக்கான் வரை ஏறக்குறைய 80 கி.மீ தூரம் ஆகும். உடலைப் பெற்றுப் புதைக்க வேண்டுமெனில் ஏகப்பட்ட ஆவணங்களை வாங்க வேண்டும். மருத்துவமனை, தூதரகம், காவல் நிலையம், இடுகாடு, ஆம்புலன்ஸ் என... அனைத்தையும் சமாளித்து இறுதியாகப் பெரியப்பாவை இடுகாட்டில், ஏற்கனவே இதேபோல் (கொரோனா என்பதால்) குழிகள் வெட்டித் தயாராக வைத்திருந்த மற்றும் வந்துகொண்டே இருந்த உடல்களுக்கு நடுவே, எங்களுக்கு வாழ்வளிக்க வழிசெய்த அந்த உயர் ஆத்மாவின் உடலைக் கத்தாரின் இடுகாட்டில் புதைத்துவிட்டு, கனத்த இதயத்தோடு வெளியேறினோம்.
இதற்குமேல் என்ன சொல்வது?! இருந்தாலும் சொல்கிறேன்...













No comments:
Post a Comment