15/07/2026

கத்தாரில் நான் - 12

 





பக்கத்து நாட்டுப் பச்சை நாட்டுக்காரர்கள் போட்டுக் கொடுத்ததன் விளைவு, நான் இருந்த அபுஹாமர் வீட்டிலிருந்து மைதரில் உள்ள அபார்ட்மெண்டிற்கு மாற்றினார்கள். அங்கே போனால், ஒரே ஒரு பொறியாளர் மட்டும் இருளும் நூலாம்படையும் நிறைந்த ஹாலில், சிகரெட் புகைக்குள் ஒளிந்திருந்து டிவியில் ஏதோ அரபிக் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உண்மையில் சொல்லப்போனால் அவர் பொறியாளரே இல்லை; அவருக்கு என்னைத்தான் வேலை சொல்லிக்கொடுக்கும்படி, அவரின் உடல் பெருத்த மச்சான் பொறியாளர் கேட்டுக்கொண்டார். நானும் நிறையவே சொல்லியும் கொடுத்தேன். அவர் ஒரு அறையிலும், நான் ஒரு அறையிலுமாக இருந்தோம். ஆரம்பத்தில் நன்றாகவே சென்றது. பின்னர் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும் முன், மேலும் சில விடயங்களைக் கூறிவிட்டு வருகிறேன்.
நான் முன்பிருந்த வீட்டில் இருந்தபடியே மூன்று மாத விசா முடிந்ததும், இம்முறை ஜப்பானிய நிறுவனத்தின் சார்பாக அபுதாபி சென்று வந்தேன். அபுதாபியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். முதல் நாளில் லூலு ஹைபர் மார்க்கெட் மற்றும் சிலபல மார்க்கெட்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே துபாய் சென்றேன். துபாயில் என் கல்லூரி நண்பர்கள் தங்கியிருந்த வீட்டிற்குப் போனேன். நண்பர்கள் எல்லாம் சேர்ந்து துபாய் மாலிற்கும், இன்னொரு முக்கியமான துபாய் டவருக்கும் கூட்டிப் போனார்கள். அடேங்கப்பா... துபாய் துபாய்தான். ஆனால், டிராபிக்தான்! மூன்று மணிநேரம் ஆகிறது. ஐயா சாமி... நமக்குக் கத்தார்தான்; நம்ம ஊருங்க மாதிரி இருக்குன்னு தோனுச்சு. இரவில் நண்பர்களோடு அறைக்குத் திரும்பியதும், நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். அப்போது சும்மா ஒரு பேச்சுக்கு நண்பன் பழனியிடம், "நண்பா, என்னை நாளைக்கு ஏதாவது ஒரு லாரியிலயாச்சும் அபுதாபி ஏத்தி விட்று" என்றேன். அவன் படிக்கும் காலத்தில் இருந்தே அவனுக்குப் பிடித்த மதம் 'தாமதம்'தான் (கவியரசர் சொல்வதுபோல்). அதேபோல்தான் அன்றும் எந்திரிக்க லேட் ஆகிடுச்சின்னு, என்னை அப்படியே மினி லாரியில ஏத்திவிட்டான். (இன்று அவன் தனி நிறுவனமே வைத்துள்ளான்). அந்த லாரிக்காரன் அபுதாபி போகாமல் முன்னாடியே நின்றுவிட, பிறகு நான் எப்படியோ போய்ச் சேர்ந்தேன். அப்புறம் மீண்டும் விசா அடித்த பிறகு கத்தார் வந்தடைந்தேன். (இப்படி இரண்டுமுறை அபுதாபி வந்துள்ளேன்)
நான் அபுஹாமரில் இருந்தபோதுதான், எங்க ஊர்க்காரர் நகரம்பட்டியைச் சேர்ந்த வாலுக்குவேலி (ஒரு குறுநில மன்னனின் பெயர் இது) அறிமுகமானார். அவர்தான் அவ்வப்போது தமிழ் உணவகங்களுக்குக் கூட்டிச் செல்வார். அவர் மூலமாகத்தான் தற்போது என் மனைவி வழியில் உறவுமுறையான ஐயப்பன் மாமா, பிரபல தொழிலதிபர் சக்திவேல், விஜய் எனப் பலரும் அறிமுகமானார்கள். வெவ்வேறு சமூகமாக இருந்தாலும் வாலுக்குவேலி எனக்குச் சித்தப்பா முறை (ஐயா காலத்துப் பழக்கம்). நான் முறை சொல்லி பழகாததால் சற்றே கூப்பிடத் தயங்குவேன். அவரும் இப்போது தொழிலதிபர்தான் என்பது கூடுதல் தகவல்.
இந்த ஜப்பானிய நிறுவனத்திடம் கற்றுக்கொண்டவைதான் எத்தனை எத்தனை...! ஒரு முறை சைட்டிற்கென சில பொருட்கள் தேவைப்பட்டது. ஜப்பானிய பொறியாளரோடு சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளையும் எடுத்து கூர்ந்து நோக்கியபடியே ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, பின்னர் ஒரு பொருளை உள்ளே போட்டார். என்னவென்று கேட்டேன். ஜப்பானியத் தயாரிப்புப் பென்சில், பேனா என எடுப்பதாகக் கூறினார். நானும் அன்று முதல் இன்று வரையிலும் அப்படியே நம் இந்தியப் பொருட்களையே பெரும்பாலும் எடுக்கின்றேன்.
ஜப்பானிய நிறுவனத்தில் இருந்தபோதுதான், ஆன்மீக ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக இங்கே உள்ள மதத்தையும் நன்கு உள்வாங்கினேன். ஊது செய்வது எப்படி? தொழுவது எப்படி? பெருநாளின் நோக்கம், நோன்பு, ஈகையென அது ஒரு நல்ல புரிதலை எமக்கு அளித்தது. நன்றி இறைவா!
சரி, மீண்டும் அந்த மைதர் அறைக்கே வருவோம். அச்சமயம் இன்டெர்நெட்டில் இருந்து வாய்ப் (VoIP) எனப்படும் இணைப்பின் வழியாகவோ, இல்லையேல் யாராவது வீட்டில் வைத்திருக்கும் இணைப்பின் வழியாகவோதான் ஊருக்குப் பேச வேண்டும். ஆகவே என்னுடைய ஓட்டுநர் முதல் ஃபோர்மேன் வரை அவ்வப்போது என் அறைக்கு வருவார்கள். அது அந்த எகிப்திய நண்பருக்குப் பிடிக்காது. அது மட்டுமா பிடிக்காது?! நாம் செய்யும் சமையல் (தோசை, இட்லி என) பிடிக்காது. குளியல் அறையில் குளித்தபின் தண்ணீர் ஒரு துளி தேங்கினாலும் பிடிக்காது. அவ்வளவு ஏன்? நாம் அறையில் இருக்கும்போது சட்டை போடுவதில்லை. அதையும் அரை நிர்வாணமாய் உள்ளதாய் தன் மச்சானிடம் கூறியுள்ளார். ச்சே... என்னடா இதுவென்று எண்ணி, உடனே வேறு ஒரு புதிய சௌதி சார்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஹாசன் என்கிற சிரிய நண்பருக்குப் போன் செய்து, அங்கே வேலை உள்ளதா என்று கேட்டேன். சரி, CV அனுப்பு என்றார். அனுப்பிய ஒரு மணிநேரத்தில் வரச்சொன்னார்கள்.

No comments: